இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் ஒரே ஒரு ஆசனத்தைப் பெற்ற கட்சியொன்றைச் சேர்ந்தவர் பிரதமராகின்றார்


 


எஸ்மண்ட் விக்கிரமசிங்க, மாலினி விக்கிரமசிங்க ஆகியோரின் மகனாக 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்க தனது கல்வி செயற்பாடுகளை கொழும்பு ரோயல் கல்லூரியில் தொடர்ந்தார். அத்துடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பயின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணி ஊடாக இவருடைய அரசியல் பயணம் ஆரம்பமானது. அதன் பின்னர், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதியில் போட்டியிட்டு 22 ஆயிரத்து 45 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

தொடர்ச்சியாக 1977ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டு இளைஞர் விவகார மற்றும் தொழில் அமைச்சராக அரசியல் பணியை தொடர்ந்தார். ரணில் விக்ரமசிங்க தனது 28வது வயதில் பிரதி வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1980ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி கல்வி அமைச்சு ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. 9 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்த அவர், கல்வித்துறையில் நவீன யுகத்துக்கேற்ப பல மறுசீரமைப்புகளை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து 1993ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றார்.

1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க , அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் காமினி திஸாநாயக்க கொல்லப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி தலைவராகவும் செயற்பட்டார். இதனைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு களனிப் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியை மைத்திரி விக்கிரமசிங்கவை கரம் பிடித்தார்.

1999ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட ரணிலுக்கு 42.71% வாக்குகள் கிடைத்தன. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றி பெற்ற ஓராண்டுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி பிரதமரான ரணில் விக்ரமசிங்க 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை அப்பதவியில் இருந்தார். நாடாளுமன்றின் ஆயுட்காலம் முடிவடைவதற்குள் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்திரிக்கா நாடாளுமன்றத்தைக் கலைத்து 2004 ஏப்ரல் 2 ஆம் திகதி மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 3 இலட்சத்து 29 ஆயிரத்து 524 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டு 47 இலட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளைப் பெற்றார். இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவே வெற்றி பெற்றார்.

2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி 6வது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஸ களமிறங்கினார். அவருக்கு எதிராக எதிரக்கட்சிகளின் சார்பில் – இறுதிப்போரை வழி நடத்திய இராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா களமிறக்கப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் களமிறங்கவில்லை என்பதுடன், யானை சின்னத்துக்கு பதிலாக அன்னப்பறவை சின்னமே முன்னிலைப்படுத்தப்பட்டது.

இந்த தேர்தலிலும், மஹிந்த ராஜபக்ஸவே வெற்றி பெற்றார். 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 2 இலட்சத்து 32 ஆயிரத்து 957 வாக்குகளைப் பெற்றார்.

தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டிய நிலை ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டது. இதற்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பொது வேட்பாளராக களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தேர்தலிவ் 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று மைத்திரி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன், மஹிந்த ராஜபக்ஸவின் 10 ஆண்டு கால சாம்ராஜ்யமும் சரிந்தது. இதனைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5 இலட்சத்து 566 வாக்குகளைப் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.

எனினும், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆட்சி கவிழ்ப்பு மூலம் மஹிந்தவை, ஜனாதிபதி மைத்திரி பிரதமராக்கினார். அதன் பின்னரான நீதிமன்ற நகர்வுகளையடுத்து, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றார்.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறியாகவே இருந்தார். எனினும், கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்ததாலும், பங்காளிகள் விடாப்பிடியாக நின்றதாலும், நாட்டு மக்கள் சஜித்தை கோரியதாலும் மூன்றாவது முறையும் தியாகம் செய்ய வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்ததோடு, கட்சி இரண்டாக பிளவடைந்து சஜித் பிரேமதாஸ


தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உயதமானது. கடந்த ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் இரு அணிகளும் தனித்தனியாகவே போட்டியிட்டன. இதில் ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களைக் கைப்பற்றியது.

ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வியை சந்தித்து நாடு முழுவதும் 2.15% வாக்குகளையே பெற்றது. அத்துடன், தேசியப்பட்டியல் ஊடாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. நாடாளுமன்ற அரசியலுக்கு வந்த பிறகு ரணில் எந்தவொரு பொதுத்தேர்தலிலும் தோற்றதில்லை. 42 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையும் படைத்துள்ளார்.

எனினும், கடந்த வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் ஆதரவை இழந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசியப்பட்டில் ஊடாக இன்றைய தினம் இலங்கை நாடாளுமன்றுக்குள் பிரவேசித்து விட்டார்.

பாரிய அரசியல் அனுபவம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவி வகித்த போதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

2022 மே மாதம் 12 ந் திகதி மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரமராகின்றார்.

பாராளுமன்ற வரலாற்றில் ஒரே ஒரு ஆசனத்தைப் பெற்ற கட்சியொன்றைச் சேர்ந்தவர் பிரதமராக தெரிவாகும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இஸ்தாயில் உவைசுர்ரஹ்மான்.