கொட்டகலை,பதுக்கி வைக்கப்பட்ட டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.



 


(க.கிஷாந்தன்)

 

கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலே திம்புள்ள - பத்தனை பொலிஸாரால் இன்று (26) பிற்பகல் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. 

 

குறித்த வர்த்தக நிலையத்தில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திம்புள்ள - பத்தன  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றில் அடிப்படையில், சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

இதன்போது ஆயிரம் லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைக்காக அவர் நாளை (27.06.2022) அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

" நாங்கள் மொத்த  வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். போக்குவரத்து சேவைக்கு எமக்கு டீசல் தேவை. அதற்காகவே சேமித்து வைக்கப்பட்டது." என கைதானவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

 

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.