கோட்டாபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை




 இலங்கையில் அதிபர் கோட்டாபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.


போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர் இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இருப்பினும் காவல்துறையினர் வைத்த தடுப்புகளைத் தாண்டி கோட்டாபயவின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சில போராட்டக்காரர்கள் இல்லத்தின் பிரதான வாயிலை நெருங்கிவிட்டதாகத் தெரிகிறது. ஏராளமான ராணுவத்தினர் போராட்டம் நடக்கும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.


கூட்டத்தைக் கலைப்பதற்காக வானத்தை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.


கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சால் காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சிகளை காண முடிகிறது.


அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருக்கிறாரா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.



பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.


இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் போன்றவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன.


நேற்று முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றனர். இன்று காலையிலும் ஏராளமான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவதைக் காண முடிந்தது.


இந்த நிலையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களைக் கலைக்கும் விதமாக காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிவருகின்றனர். இதில் ஏராளமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்துவரும் காலி மைதானத்துக்கு வெளியேயும் ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்.