சுழலில் மிரட்டிய மொயீன் அலி, டெத் ஓவரில் காப்பாற்றிய துஷார் - சேப்பாக்கத்தில் சிஎஸ்கே 'சூறாவளி' ஆட்டம்



 


மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி குஜராத் உடனான தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னௌ அணியை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால் முதல் இன்னிங்ஸில் ப்யலைக் கிளப்பிய சிஎஸ்கே 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்தது. 218 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னௌ 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.

சென்னை அணிக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடக்கும் போட்டி இது. அதுமட்டுமின்றி, சொந்த மண்ணில் அவர்கள் வெற்றி பெற்று நான்கு ஆண்டுகள் கழித்து இந்த வெற்றி கைகூடியுள்ளது.

இந்நிலையில், இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே களமிறங்கினார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

பவர் பிளேவில் லக்னௌவை பந்தாடிய கெய்க்வாட்

முதல் ஓவரை வீச வந்தார் கைல் மேயர்ஸ். ஆனால், ஆட்டம் தொடங்கும் நேரத்தில் மைதானத்திற்குள் நாய் ஒன்று ஓடி வந்ததால் சிறிது தாமதம் ஆனது. இதேபோன்ற சம்பவம் சில வாரங்களுக்கு முன்பு, இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டிகளிலும் நடந்தது. ஐந்து நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கிய முதல் ஓவரில் சென்னை 6 ரன்களை எடுத்தது.

ஆனால், ஆவேஷ் கான் வீசிய இரண்டாவது ஓவரில், வைட், நோ-பால் என்று வீசியதோடு, ரன்களையும் வாரி வழங்கினார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 17 ரன்களைக் கொடுத்தார் ஆவேஷ் கான். அதைத் தொடர்ந்து மூன்றாவது ஓவரிலும் மேயர்ஸ் வீசிய பந்துகளில் 10 ரன்களை கெய்க்வாட், கான்வே கூட்டணி குவித்தது.

பவர் பிளே கட்டத்தின் 5வது ஓவரை வீசிய கௌதம், அந்த ஒரு ஓவரிலேயே 20 ரன்களைக் கொடுத்தார். அதே வேகத்தோடு பவர் பிளேவின் இறுதி ஓவரையும் ஆடிய சிஎஸ்கே அதிலும் 19 ரன்களைக் குவித்தது.

முதல் ஆட்டத்தோடு ஒப்பிடுகையில், இந்த முறை பவர் பிளேவை ஓரளவுக்கு நன்றாகவே சென்னை அணி பயன்படுத்தியுள்ளது என்று கூறலாம்.

அதேவேளையில் லக்னௌ தரப்பில் பந்துவீசிய கௌதம், மார்க் வுட், ஆவேஷ் கான் ஆகியோரும் அதிக ரன்களைக் கொடுத்துவிட்டார்கள். களத்தில் தொடர்ந்து எதிர்பார்த்த பேட்டிங்கை வெளிப்படுத்திக்கொண்டிருந்த கெய்க்வாட், 8வது ஓவரில் 25 பந்துகளில் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். கெய்க்வாட் அரை சதம் அடித்ததைத் தொடர்ந்து கான்வேவும் தனது பங்குக்கு அந்த ஓவரில் இரண்டு சிக்சர்களை அடித்து க்ருனல் பாண்டியாவின் ஓவரை முடித்து வைத்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களை சாமர்த்தியமாக எதிர்கொண்டார். ஆனால், 10வது ஓவரில் ரவி பிஷ்னோய் வீசிய பந்தை அடித்தபோது அதைத் துல்லியமாக கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் மார்க் வுட். ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்துகளில் 57 ரன்களை எடுத்து வெளியேறினார்.