ரியாத் அமெரிக்கத் தூதரகத்தின் மீது ட்ரோன் தாக்குதல்




 சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் இன்று (03) அதிகாலை பயங்கர வெடிச்சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.


ரியாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சவூதி பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்திற்குள் கரும்புகை சூழ்ந்ததோடு, தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.


அங்கிருந்தவர்கள் இரண்டு முறை பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். தூதரக வளாகத்தில் பரவிய தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.