நாவிதன்வெளி பிரதேச பாடசாலைகளை மீண்டும் “அதி கஷ்ட பாடசாலை” பட்டியலில் சேர்க்க கோரிக்கை



 


நூருல் ஹுதா உமர்

 
நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தொடரின் 9வது சபை அமர்வு புதன்கிழமை காலை 9.30 மணியளவில் நாவிதன்வெளி பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் கு. புவனரூபன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் பா. சதீஸ்கரன் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

அமர்வின் போது உரையாற்றிய தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மக்களுக்கு அபிவிருத்தி திட்டங்கள் விகிதாசார அடிப்படையில் பங்கீடு செய்து வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் நாவிதன்வெளி பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள், தமிழ் மக்கள், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அவர்களின் விகிதாசாரத்தில் படி அவர்களுக்கான ஒதுக்கீடுகளை நாம் செய்ய தயாராக இருக்கிறோம். தாம் இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு எதிரானவர் என்றும், மக்களின் நலனே தமக்கான பிரதான குறிக்கோள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் போது நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளை மீண்டும் “அதி கஷ்ட பாடசாலை” பட்டியலில் சேர்க்க வேண்டுமெனும் பிரேரணையும் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.நளீர் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

அந்தப் பிரேரணையில், நாவிதன்வெளி பிரதேசம் கல்வி, போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் குறைவாக காணப்படும் சவாலான பிரதேசமாக இருப்பதாகவும், இப்பகுதியில் அமைந்துள்ள பல பாடசாலைகள் முன்னர் “அதி கஷ்ட பாடசாலை” பட்டியலில் இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.

அவ்வாறே, அவை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் இப்பகுதியில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் வெளியூரிலிருந்து தினசரி பயணம் செய்து வந்து கற்பித்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

போக்குவரத்து சிரமங்கள், தூர இடைவெளி மற்றும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை காரணமாக கல்வி நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன் சில பாடங்கள் முறையாக கற்பிக்கப்படாமல் உள்ளதாகவும், மாணவர்கள் கல்வியில் பின்தங்கும் அபாய நிலையும் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே மேற்கண்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, நாவிதன்வெளி பிரதேச பாடசாலைகளை மீண்டும் “அதி கஷ்ட பாடசாலை” பட்டியலில் சேர்த்து, தேவையான ஆசிரியர் நியமனங்கள் மற்றும் தொடர்புடைய சலுகைகளை வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கும் பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.

மேலும் இப் பிரேரணைக்கு விரைவான மற்றும் சாதகமான நடவடிக்கை எடுத்து, நாவிதன்வெளி பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஆராய்ந்த சபை இந்த பிரேரணையை முன்னிறுத்தி ஆளுநர், உரிய அதிகாரிகள், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்றவற்றில் கோரிக்கை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது.