நூருல் ஹுதா உமர்
தேசிய சுற்றாடல் சட்டத் திருத்த மசோதாவின் மூன்றாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய விழிப்புணர்வை உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடையே ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு விழிப்பூட்டல் நிகழ்வு இன்று (23) சம்மாந்துறை பிரதேச சபையில் நடைபெற்றது.
மத்திய சுற்றாடல் அதிகார சபை அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை, நாவிதன்வெளி, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய கரையோரப் பிரதேச உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் சுற்றாடல் விடயங்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.
காலை 09.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில், தேசிய சுற்றாடல் சட்டத்திருத்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான புதிய சட்ட ஏற்பாடுகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உள்ளூராட்சி மன்றங்களின் பங்கு, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் உள்ள சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
மத்திய சுற்றாடல் அதிகார சபை அம்பாறை மாவட்ட அலுவலக உதவி பணிப்பாளர் பி.எம்.டபிள்யூ.என். பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் எம்.ஐ.எம். இஸ்ஹாக், கே. ஹுரைசிவா உள்ளிட்ட அதிகாரிகள் வளவாளர்களாக கலந்து கொண்டு விளக்கவுரைகள் வழங்கினர்.
தேசிய சுற்றாடல் சட்டத்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வை உள்ளூராட்சி நிர்வாக மட்டத்தில் வலுப்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்கும் இந்நிகழ்வு பயனுள்ளதாக அமைந்ததாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment