நூருல் ஹுதா உமர்
கொழும்பு ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி, தனது 141 ஆண்டு கால கல்விப் பாரம்பரியத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தயாராகியுள்ளது. அந்த வகையில் கல்லூரியின் புதிய ஒன்பது மாடி கல்வி, விளையாட்டு மற்றும் புதுமை வளாகத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா எதிர்வரும் ஜூன் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.
1884ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த முன்னோடி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
மாணவர்களை உலகத் தரத்திற்கு ஏற்ப உருவாக்கும் நோக்கில் இந்த ஒன்பது மாடி வளாகத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 102 பர்சஸ் பரப்பளவுடைய காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வளாகத்தில் ஸ்மார்ட் டிஜிட்டல் வகுப்பறைகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கற்றல் வசதிகள், நவீன விஞ்ஞான ஆய்வு கூடங்கள், டிஜிட்டல் நூலகம், ஆராய்ச்சி மையங்கள், 500 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம், கேட்போர் கூடம் மற்றும் பல்நோக்கு அரங்குகள், உட்புற விளையாட்டு அரங்கு, நீச்சல் தடாகம், புட்சால் மைதானம், கராத்தே, குத்துச்சண்டை, சதுரங்கம் மற்றும் பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான நவீன பயிற்சி வசதிகளும் இதில் இடம்பெறவுள்ளன.
இக்கட்டிடம் சுற்றுச்சூழல் நட்பு அம்சங்களுடன் கூடிய பசுமை வளாகமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி பயன்பாடு, மழைநீர் சேகரிப்பு, கழிவு முகாமைத்துவம், இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டத்தின் அதிகபட்ச பயன்பாடு போன்ற அம்சங்கள் இதில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
இம்முயற்சிக்கு பிரதான நன்கொடையாளராக மறைந்த எம்.எச். ஒமர் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தார். அவரது ஆதரவுடன், 2017ஆம் ஆண்டு 80 பர்சஸ் நிலப்பரப்பு பாடசாலைக்காக வெற்றிகரமாக கொள்முதல் செய்யப்பட்டமை இன்றைய வளர்ச்சிப் பயணத்தின் முக்கிய அடித்தளமாகக் கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் “LIGHT FOR LIFE” அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட நிகழ்வின் மூலம் புதிய கட்டிடத் திட்டம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதற்கான நிதி திரட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
ஜூன் 28ஆம் திகதி நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். அதேவேளை, இலங்கைக்கான காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி அவர்கள் சிறப்பு அதிதியாக பங்கேற்கவுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், அரச மற்றும் தனியார் துறை உயரதிகாரிகள், நன்கொடையாளர்கள், சமூகப் பிரமுகர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு சிறப்பு அதிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.


Post a Comment
Post a Comment