நீதித்துறை பிரச்சினைகளை தீர்க்க நிபுணர்களின் ஆலோசனை வேண்டும்: ஜனாதிபதி




நீதித்துறையில் தீர்வைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படுகின்ற தாமதத்தை குறைப்பதற்கு நிபுணர்களின் ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் நீதித்துறை சார்பான விடயங்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்கின்ற போது, முயற்சி செய்த நபருக்குப் பின்னர் உள்ள இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறையினரே அந்த தீர்வைப்பெற்றுக்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இது சட்டத்துறையில் உள்ள பிரச்சினையல்ல என்பதோடு சமூகத்தில் உள்ள பிரச்சினை என்தால் சட்டத்துறை நிபுணர்கள் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமகன் ஒருவர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக செல்கின்ற போது அது நுகர்வுப் பொருளாக மாறியிருக்கின்றமை வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுப்பதாக ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார்.