பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதன் ஊடாகவோ அழுத்தம் கொடுக்கப்படுமென ஊடகங்களில் அறிக்கை விடுவதினூடகவோ தீர்வு கிடைக்கப்போவதில்லை.
தொழிலாளர்களுக்கான சரியான தீர்வு பெற்றுக்கொடுக்க 75 ஆண்டு கால வரலாறு கண்ட எமக்கு தெரியுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் நுவரெலியா, அட்டன், தலவாக்கலை போன்ற இடங்களில் கட்சி முக்கியஸ்தர்களினூடான கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்தார்.
தோட்டப்பகுதிகளில் தோட்ட நிர்வாகத்தினூடாகவே தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய சலுகைகள் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் மலையக மக்களின் அனைத்து விடயங்களிலும் இன்றுவரை அவர்களின் நன்மைக் கருதியே தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏதிர்வரும் காலங்களிலும் அரசியல் ரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவும் மக்களுக்கான சேவை பெற்றுக்கொடுக்கப்படுமென காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் எம். ரமேஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கனபதி கனகராஜ், பிலிப்குமார், சத்திவேல் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், மகளிர் இணைப்பதிகாரிகள் ஆகியோர் கலந்தக்கொண்டனர்.
