இந்திய 67வது குடியரசு தின விழா



புதுடில்லி: 67வது குடியரசு தின விழா இன்று(26-01-16) இந்திய நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டில்லி ராஜபாத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

67வது குடியரசு தின விழா : நாட்டின் 67வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே பங்கேற்கிறார். டில்லி ராஜபாதையில் நடைபெறும் முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பலத்த பாதுகாப்பு: குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையொட்டி, டில்லியில் உள்ள முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜபாதை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவத்தினரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலங்களிலும் : உ.பி., மகாராஷ்டிரா, ம.பி.,, அசாம், பீகார், குஜராத் அரியானா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பதனஜ்கோட் தாக்குதல் அரங்கேறிய பஞ்சாபில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பயங்கரவாதி சுட்டுக்கொலை: இந்நிலையில் ஜம்முவில் பயங்கரவாதி ஒருவன் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டான். அவனிடமிருந்து ஏ.கே,47 ரக துப்பாக்கி ஒன்றி கைப்பற்றப்பட்டது.