மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மட்டக்களப்பில் புனர்வாழ்வு மையம்



புனர்வாழ்வு பெற்று வீடு திரும்பிய பின்னர் அவர்கள் தங்களால் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவசியம் ஏற்பட்டால் அவர்கள் மீண்டும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணங்களில் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு உதவுவதற்காக புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
போருக்குப் பின்னர் இந்தப் பகுதிகளில் மதுப் பாவனை அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாக, மதுவுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் மையம் ஒன்றை கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் திறந்துள்ளது.
மட்டக்களப்பு மாவடிவேம்பு என்னும் இடத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த புனர்வாழ்வு மையத்தில் முதல் கட்டமாக 10 பேர் தங்கியிருந்து புனர்வாழ்வு பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அரச உளநல மருத்துவர் டாக்டர் ஜுடி ரமேஸ் ஜெயக்குமார் கூறினார்.
உளநல மருத்துவப் பிரிவின் கீழ் இயங்கும் இந்த மையத்தில், மதுவுக்கு அடிமையானவர்களுக்கு ஒரு மாத புனர்வாழ்வு அளித்து பின்னர் அவர்களை குடும்பத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவிக்கின்றார் .
தீவிர சிகிச்சை, நடத்தை மாற்றம், நாளந்த பணிகள் மற்றும் குடும்பங்களுடன் மீள இணைத்தல் என நான்கு கட்டங்களில் புனர்வாழ்வு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இறுதி வாரத்தில் குடும்ப மீள் இணைப்புக்காக தங்களின் குடும்பத்துடன் தங்கிருப்பதற்கும் சமைத்து உண்பதற்கும் குடும்பமாக வாழ்வதற்கும் பிரத்தியேக தங்குமிட வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ஜுடி ரமேஸ் தெரிவித்தார்.
புனர்வாழ்வு பெற்று வீடு திரும்பிய பின்னர் அவர்கள் தங்களால் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவசியம் ஏற்பட்டால் அவர்கள் மீண்டும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.