நியமனம் மறுக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணை நியமிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு!




கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இனவாத அடிப்படையில் விரிவுரையாளர் நியமனம் மறுக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணொருவரை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் விரிவுரையாளராக நியமிக்குமாறு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
2011ம் ஆண்டு நடைபெற்ற விரிவுரையாளருக்கான நேர்முக தேர்வில் அதிக புள்ளிகளை பெற்ற பாத்திமா ஷானாஷ் என்பவருக்கு இன அடிப்படையை காரணமாக நியமனம் வழங்குவதை பல்கலைக்கழகம் புறக்கணித்துள்ளது.
அனைத்தை அடக்கி வைத்திருந்த கடந்த இருண்ட காலத்தில் நாட்டில் இனவாதம் அதிகரித்திருந்ததுடன் அது பல்கலைக்கழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாக மனித உரிமைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
எனினும் நேற்று கிடைத்த வெற்றியானது நாட்டிற்குள் மீண்டும் சுதந்திரமான நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகம் வேண்டும் என்றே மனுதாரின் நியமனத்தை நிறுத்தியுள்ளதாக உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஈவா வனசுந்தர மற்றும் உபாலி அபேரத்ன ஆகியோர் தமது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இதழியல் துறையின் விரிவுரையாளராக தெரிவு செய்யப்பட்ட பாத்திமா ஷானாஷை அந்தத் துறையில் நியமிக்காததன் மூலம், நிர்வாகம் அவரது அடிப்படை உரிமையை மீறியுள்ளதாகவும் நீதியரசர்கள் கூறியுள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ குழு மற்றும் பல்கலைக்கழக பேரவை என்பன அரசியலமைப்புச் சட்டத்தின் 12(1)ல் உறுதிப்படுத்தியுள்ள மனுதாரரின் அடிப்படை உரிமையை மீறியுள்ளன.
இதனால், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மனுதாரை விரிவுரையாளர் பதவிக்கு நியமிக்குமாறு பல்கலைக்கழக முகாமைத்துவ குழு மற்றும் பேரவைக்கு உத்தரவிடுவதாக நீதியரசர்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.