இந்தியாவில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றத்திற்காக தண்டனை பெற்றிருந்த ஹிந்தி சினிமா நடிகர் சஞ்சய் தத் இன்று விடுதலையாகியுள்ளார்.
அவருக்கு அளிக்கப்பட்டிருந்த 5-ஆண்டு சிறைத் தண்டனையில் 4 ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கும் நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பூனேவில் அவர் விடுதலை செய்யப்பட்ட சிறைக்கு வெளியே பத்திரிகையாளர்கள் பலர் கூடியிருந்தனர். வெளியில் வந்த அவர் தரையை முத்தமிட்டார்.
திரைப்படங்களில் பெரும்பாலும் குற்றக் கும்பல்களின் தலைவனாகவும், சண்டை போடும் கதாநாயகனாகவும் நடித்து புகழ்பெற்ற இவர், மும்பையில் 1993ஆம் ஆண்டு நடந்த குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றக் கும்பலிடமிருந்து ஆயுதங்களை வாங்கிய குற்றத்திற்காக குற்றம் காணப்பட்டிருந்தார்.
அந்தத் தாக்குதல்களை அடுத்து ஏற்பட்ட கலவரத்தின் போது தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காகவே தான் அந்தத் துப்பாக்கிகளை வாங்கியதாக சஞ்சய் தத் கூறியிருந்தார்.

