சமஷ்டி முறையிலான தீர்வுக்கு இந்தியா உதவ விக்னேஸ்வரன் கோரிக்கை




சமஷ்டி முறையிலான தீர்வுக்கு இந்தியா உதவ விக்னேஸ்வரன் கோரிக்கை
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காண்பதற்காகத் தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பேரவையின் வல்லுநர் குழுவின் கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றபோதே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அதற்கன திட்ட வரைவு ஒன்றை தமிழ் மக்கள் பேரவை தயாரித்து, அதனைப் பொதுமக்கள் மத்தியில் வைத்திருக்கின்றது என்று ஞாயிறன்று வவுனியாவில்இடம்பெற்றக் கூட்டத்தில் கூறப்பட்டது.
இதற்கிடையில் குறைபாடுகள் நிறைந்ததொரு 13 ஆவது அரசியல் திருத்தத்தையே இந்தியா அளித்தது என சுட்டிக்காட்டியுள்ள வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், குறைகளற்ற வகையில் சமஸ்டி முறையிலானதோர் அரசியல் தீர்வை இந்தியா பெற்றுத்தர வேண்டும் என கோரியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.
இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.