கடந்த சில வருடங்களாக அரியவகை இரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் (53) காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், வியாழக்கிழமையன்று மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உடலின் நோயெதிர்ப்புக் கட்டமைப்பில் ஏற்பட்ட லிம்போமா எனப்படும் ஒருவகை புற்றுநோயால் அவதியுற்றுவந்த இவர், 2012ல் பூரண குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், 2014 செப்டம்பரில் மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
ஆக்லாந்தில் பிறந்த குரோவ், நியுசிலாந்தின் கிரிக்கட் வரலாற்றில் மிகச் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர் என்ற பெயரைப் பெற்றிருந்தார்.
77 டெஸ்ட் போட்டிகளிலும், 143 ஒருநாள் போட்டிகளிலும் நியுசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.
16 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் நியுசிலாந்து அணிக்கு தலைமை தாங்கிய குரோவ், 1991ல் வெலிங்டனில் இலங்கை அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் அதிகூடிய ரன்களாக 299 ரன்களை குவித்தார்.
குரோவுடன் முன்னர் இலங்கையில் கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடிய அனுபவம் குறித்து பிபிசி தமிழோசைக்கு தெரிவித்த இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் துணைத் தலைவர் றோய் டயஸ், அவரிடமிருந்து அதிகம் கற்றுக்கொண்டதாகவும் அவரது மரணம் கிரிக்கெட் உலகிற்கு ஒரு பேரிழப்பு என்றும் தெரிவித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் 299 எனும் அதிகபட்ச தனிநபர் சாதனையை 23 ஆண்டுகளாக மார்டின் குரோவ் தக்கவைத்துக் கொண்டிருந்தார்.
முழங்கால் உபாதை காரணமாக 1996ல் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற குரோவ் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் எழுத்தாளராகவும் செயற்பட்டார்.
இவர் நியுசிலாந்தில் உருவாக்கிய `கிரிக்கெட் மக்ஸ்' திட்டமே துரித வேக கிரிக்கெட் போட்டிகளான டி20ன் வருகைக்கும் வளர்ச்சிக்கும் முன்னோடியாக இருந்தது.

