கொழும்பு நகரை அழகுபடுத்தும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையம் அமைந்துள்ள பஸ்தியான் மாவத்தை பகுதியில் மிதக்கும் சந்தை அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
உல்லாசப் பயணிகளை கவரும் வகையில் அமைந்திருக்கும் இந்த மிதக்கும் சந்தையானது 92 விற்பனைக் கூடங்களுடன் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் என்பனவற்றை கொண்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலப்பகுதியில் மஹிந்த சிந்தனை வேலை திட்டத்தின் கீழ், அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் மேற்பார்வையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு புறக்கோட்டையில் இந்த மிதக்கும் வர்த்தக சந்தைத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டது.
இந்த சந்தை இறங்கு துறையானது அன்றைய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் தேசத்தின் மரபுரிமைக்காக அர்ப்பணிக்கப்பட்டு தேசத்தார் அறிய கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கதே. அதேபோன்று அன்று உள்நாட்டாருக்கும், வெளிநாட்டாருக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு இடமாக காணப்பட்ட இந்த புறக்கோட்டை சந்தை இறங்கு துறையானது இன்று கவனிப்பாரற்று காணப்படுவது வேதனைக்குரியதே.
பலரின் பொழுதுபோக்கு இடமாக காணப்பட்ட இந்த இடம் கடந்த சில வாரங்களாக சகிக்கமுடியாத துர்நாற்றம் வீசும் பகுதியாக மாறி சனநடமாட்டம் அற்ற பகுதியாக வெறிச்சோடி காணப்படுகின்றது. இந்நிலையில் சந்தை இறங்கு துறையானது அமைந்துள்ள பேரே வாவியின் ஒரு பகுதியில் காணப்படும் பாரிய கழிவு தேக்கம் காரணமாகவே இந்த துர்நாற்றம் வீசுகின்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. வாவியில் காணப்படும் கழிவு தேக்கமானது சுத்திகரிக்கப்படாத நிலையில் அச் சுற்றுப்பகுதி முழுவதும் துர்நாற்றத்தினால் மாசடைந்து காணப்படுகின்றது.
பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் பாராமுகத்தினால் இச்சிறுதொழிலையே ஜீவனேபாயமாக கொண்டுள்ள மிதக்கும் சந்தை தொகுதி வியாபாரிகள் புத்தாண்டை சோகமாக பார்க்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இச்சூழல் பிரச்சினைக்கு தீர்வினை எட்டித்தருமாறு காய்ந்து நிற்கும் வியாபாரிகளும், முகம்சுழித்து செல்லும் பாதசாரிகளும், மூக்கை பிடித்து செல்லும் நுகர்வோரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதேவேளை, நாட்டின் தன்மானத்தில் பங்குவகிக்கும் இவ்வாறான பொது இடங்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
