ஹலால் பிரச்சினை,ஜெய்லானி பிரச்சினை தீர்ந்து விட்டதா? எங்கே பல சேனா?



பல சேனாக்கள் இன்று எங்கு சென்றன. அவர்களது ஹலால் பிரச்சினைக்கான கோஷம் எங்கே? ஜெய்லானிப் பிரச்சினை தீர்ந்து விட்டதா?  என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பினர்.
நேற்று (9) நள்ளிரவு வரை தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
கடந்த அரசாங்கத்தின் தோல்விக்கு சிறுபான்மை முஸ்லிம்களின் வாக்குகள் இழக்கப்பட்டமை பிரதான காரணம் எனக் கூறப்பட்டது. இனவாத கடும்போக்கு சக்திகளை கடந்த அரசாங்கத்திலுள்ளவர்கள் நேருக்கமாக்கிக் கொண்டதுதான் இதற்குப் பிரதான காரணம் எனக் கூறப்பட்டது. இது குறித்து தங்களது கருத்து என்னவென வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
முஸ்லிம்களின் வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தூரமாக்குவதற்கே அந்த சேனாக்களைப் பயன்படுத்தினர். தற்பொழுது, அந்த சேனாக்கள் எங்கே? கடந்த பல மாதங்களாக நான் என்றால் அந்த சேனாக்களின் ஒரு சப்தத்தையும் கேட்கமுடியவில்லை. அன்று காணப்பட்ட உத்வேகம் இன்று எங்கு போனது? இந்த இனவாத பேசி மீண்டும் நாட்டை தீ மூட்டவேண்டும் என்று நான் கூறவரவில்லை.
சிலபோது மீண்டும் தேர்தல் ஒன்று வரும் போது இந்த நாடகம் அரங்கேற்றப்படலாம். குறிப்பாக இந்நாட்டு சிங்கள மக்கள் இந்த சூழ்ச்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதனை நாம் பொறுப்புடன் கூறுகின்றேன் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச மேலும் குறிப்பிட்டார்.