சுகாதார அதிகாரிகளின் அசமந்தம்



வத்தளையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் காட்டிய அசமந்தப் போக்கு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன கடுமையாக விமர்சித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற அசாதாரண காலநிலையின் காரணமான வெள்ளப்பெருக்கின் போது வத்தளை ஒலியமுல்லை பிரதேசத்தில் இருந்த தமிழ் மக்களும் தற்காலிகமாக இடம்பெயர நேரிட்டது.
அதன் பின்னர் குறித்த மக்களுக்காக நடத்தப்பட்ட மருத்துவ முகாமுக்கு சுகாதார அதிகாரிகள் தேவையான மருந்துப் பொருட்களை அனுப்பியிருக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சுவிஸ் பயணம், இனவாத மற்றும் அதிகார மமதை கொண்ட மருத்துவர் சங்கத் தலைவர் பாதெனிய போன்ற காரணிகளினால் வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட சிற்சில பிரதேசங்களில் சுகாதாரத்துறையினர் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன இதனை வன்மையாக கண்டித்துள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றே சதுர சேனாரத்னவும் சிறுபான்மை மக்கள் மீது மரியாதை கலந்த நேசவுணர்வைக் கொண்டவர் என்பது பல்வேறு தடவைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தத்தின்போது களனி ஆற்றோர மக்களை மீட்பதற்கான கள நடவடிக்கையை முதலில் ஆரம்பித்து வைத்ததும், தேவையான படகுகள் மற்றும் விமானப்படையினரின் ஹெலிகொப்டர் மீட்பு நடவடிக்கைகள் என அனைத்தையும் ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்ததிலும் சதுர சேனாரத்னவின் பங்கு குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே அப்பிரதேசங்களில் வாழ்ந்த சிறுபான்மை மக்கள் பெருமளவான இழப்புகள் இன்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.