வெள்ள பாதிப்புக்களை மதிப்பிடும் வரை 10,000 ரூபா முற்கொடுப்பனவு



கடந்த தினங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு நிலைமையினால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ, கடுவெல, ஹங்வெல்ல ஆகிய பிரதேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மதிப்பிடும் வரை, அவர்களுக்கு 10,000 ரூபா வீதம் முற்கொடுப்பனவாக வழங்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் வெள்ளத்தினால் வீடு முழுவதுமாக பாதிக்கப்பட்ட 40,000 குடியிருப்பாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தினால் வீடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குதல், மதிப்பீட்டு அறிக்கை கிடைத்த பிறகு முன்னெடுக்கப்படும் என்பதையும், இவ் 10,000 ரூபா முற்கொடுப்பனவாகவே வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில் சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால் பாதிப்புக்குள்ளான வீடுகளில் வசித்து வந்த நபர்களுக்கு வேறு வீடுகளை தேடிக் கொள்வதற்கு 03 மாத காலத்திற்கு வழங்கப்படும் 50,000 கொடுப்பனவுகளில், இன்று வரை 150 க்கும் அதிகமான நபர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாக மாவட்டசெயலாளர் சுட்டிக் காட்டினார்.
சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால் சேதமடைந்த வீடு, கட்டிடங்கள் மற்றும் வியாபார நிலையங்கள் தொடர்பாக, அரசாங்க மதிப்பீட்டு அதிகாரிகள் கடந்த தினங்களில் மேற்கொண்ட மதிப்பீடு தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் அவற்றுக்கு கொடுப்பனவுகள் வழங்கும் செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால் பாதிப்புக்கு உள்ளான சாலாவ மற்றும் அதனை சூழவுள்ளபிரதேசங்களில் காணப்படும் வீடுகளைபுனர்நிர்மாணிக்கும் பணிகள் இராணுவத்தினரால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இன்று மாலை வேளை வரை 150 வீடுகள் புனர்நிர்மானம் செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தின் மேல் மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.