அமைச்சர் தலதாவின் யோசனை ஜனாதிபதியால் நிராகரிப்பு



வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரளவின் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் வீட்டுப் பணிப்பெண்களின் ஆகக்குறைந்த வயதெல்லையை 22 ஆக குறைக்கும் யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
அமைச்சரவையில் நேற்று இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போது ஜனாதிபதி இதனை நிராகரித்துள்ளார்.
தற்போது காணப்படும் 25 என்ற ஆகக் குறைந்த வயது எல்லையை 22 ஆக குறைப்பதற்கு அனுமதி வழங்குமாறு தலதா அதுகோரள அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தார். எனினும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வயதெல்லையை குறைப்பதனால் இளம் யுவதிகள் அதிகளவில் வெளிநாட்டுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக செல்லக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வதனை முடிந்தால் முற்று முழுதாக நிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டுக்கு மேலும் சில அமைச்சர்களும் வலு சேர்த்துள்ளனர்.
அரசாங்கத்தின் நிலைப்பாடும் கொள்கையும் அதுவென்றால் அதனை ஏற்றுக் கொள்வதாக தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து தேசிய கொள்கை ஒன்றை உருவாக்க ஜனாதிபதி அமைச்சரவை குழுவொன்றை நியமித்துள்ளார்.
இந்தக் குழுவில் அமைச்சர் தலதா அதுகோரளவும் அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வதனை முற்று முழுதாக தடுத்து நிறுத்த முடியுமா என ஆராயுமாறு ஜனாதிபதி அந்தக் குழுவினரிடம் கோரியுள்ளார்.