டிரக்டர் சாரதியை சங்கிலியால் தாக்கிய போக்குவரத்து பொலிஸ்




(NEWS FIRST)
கிளிநொச்சியில் டிரக்டர் சாரதி ஒருவர் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்படும் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.
ஏ9 வீதியில் 156 ஆம் மைல்கல் பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தக் காட்சிகளைப் பதிவு செய்ததாக சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்தவர் நியூஸ்பெஸ்ட்டிற்குக் கூறினார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, வாகன விபத்து தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யவே பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
வேன் ஒன்றை மோதிவிட்டு டிரக்டர் சாரதி ஒருவர் தப்பிச் செல்வதாக தமக்கு முறைப்பாடு கிடைத்திருந்ததாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபரான சாரதியிடம் இருந்த இரும்புச்சங்கிலியை பொலிஸ் போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர் பறித்தெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மதுபோதையில் இருந்ததாகவும், அவர் சங்கிலியால் தாக்கியதன் காரணமாக சிலருக்கு காயமேற்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
எவ்வாறாயினும், தாக்குதலில் காயமடைந்த டிரக்டர் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.