(படுவான் பாலகன்)
இலங்கை நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஒன்றான கிழக்கு மகாணத்தில் பல்வேறு இனத்தவர்கள் வாழ்கின்றபோதிலும் இம்மாகாணம் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மூன்று மாவட்டங்களையும் அம்பாறையில் ஏழு கல்வி வலயங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்களும், திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்களுமாக மொத்தம் 17கல்வி வலயங்களையும் கொண்ட மாகாணமாகவும் அமையப்பெற்றுள்ளது.
இலங்கை நாட்டில் நடைபெறுகின்ற பாடசாலை மாணவர்களுக்கான பிரதான பரீட்சைகளில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முக்கியம் பெறுவதாக அமைந்துள்ளது. கவ்விப்பொதுத்தராதர உயர்தரம் பாடசாலையில் கற்பதற்கான தடைதாண்டல் பரீட்சையாகவும் அமைந்துள்ளது. இப்பரீட்சையில் அனைவருமே சித்திபெற முடியும் அவ்வாறு சித்திபெற்றால் உயர்தர கல்வியை தொடரமுடியும். சாதாரணதரத்தின் பரீட்சை பெறுபேறுகள் பல மாணவர்களின் வாழ்க்கையில் திசை திருப்பங்களை ஏற்படுகின்றது. இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை ஏனைய ஆண்டுகளைவிட 2015ம் பின்னோக்கி சென்றுள்ளமையை தரவுகளின் மூலமாக அறியக்கூடியதாகவிருக்கின்றது.
ஒரு நாட்டினது அபிவிருத்தியில் முக்கியம்பெறும் ஒரு துறையாக கல்வி இருக்கின்றதான போதும், மத்திய அரசாங்கத்தின் மூலமாக கல்வி செயற்பாட்டிற்கு அதிகளவான பணத்தினை செலவு செய்தும், அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் கிடைக்கப்பெறுகின்ற போதிலும் இலங்கை பூராக நோக்குகின்றபோது கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் கல்விப்பொதுத்தராதர உயர்தரத்திற்கு தகுதிபெறுபவர்களின் வீதம் அதிகரித்து செல்லுகின்றது. ஆனாலும் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகின்ற போதும் கடந்த ஆண்டுகளை விட பின்னோக்கி 2015ம் ஆண்டு சென்றிருக்கின்றது.
இலங்கை பூராகவும் பாடசாலை பரீட்சார்த்திகளில் முதலாம் தடவை 2008ம் ஆண்டில் இருந்து 2015ம் ஆண்டு வரை தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை அவதானிக்கின்ற போது
இலங்கை பூராகவும் 2008ம் ஆண்டு நடைபெற்ற சாதாரணதர பரீட்சையில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கு 281028 பேர் தோற்றி அவர்களில் கல்விப்பொதுத்தராத உயர்தரத்திற்கு 159633 பேர் தெரிவாகினர். 2009ம் ஆண்டு 272200 தோற்றி 142938 பேர் கல்விப்பொதுத்தராத உயர்தரத்திற்கு தெரிவாகினர். 2010ம் ஆண்டு 271644பேர் தோற்றி 164527பேர் கல்விப்பொதுத்தராத உயர்தரத்திற்கு தெரிவாகினர். 2011ம் ஆண்டு 270032பேர் தோற்றி 164191பேர் கல்விப்பொதுத்தராத உயர்தரத்திற்கு தெரிவாகினர். 2012ம் ஆண்டு 268995பேர் தோற்றி 174160பேர் கல்விப்பொதுத்தராத உயர்தரத்திற்கு தெரிவாகினர், 2013ம் ஆண்டு 264772பேர் தோற்றி 176534பேர் கல்விப்பொதுத்தராத உயர்தரத்திற்கு தெரிவாகினர். 2014ம் ஆண்டு 257322பேர் தோற்றி 177612 கல்விப்பொதுத்தராத உயர்தரத்திற்கு தெரிவாகினர். 2015ம் ஆண்டு 273224பேர் தோற்றி 189428பேர் கல்விப்பொதுத்தராத உயர்தரத்திற்கு தெரிவாகினர்.
இதனடிப்படையில் பார்க்கின்ற போது 2009ம் ஆண்டு 2008ம் ஆண்டைவிட குறைவான மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதிபெற்றவர்களாக இருந்தாலும் 2009ம் ஆண்டில் இருந்து 2015ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக உயர்தரத்திற்கு தகுதி பெறுபவர்களின் வீதம் அதிகரித்து கொண்டே செல்கின்றமையை காணமுடிகின்றது. இது இலங்கை நாட்டினது கல்வியில் உண்டான வளர்ச்சிப்போக்கை காட்டுவதாக அமைகின்றது என குறிப்பிட முடியும்.
பாடசாலை பரீட்சார்த்திகளில் முதலாம் தடவை சாதாரண தரத்திற்கு தோற்றி கல்விப்பொதுத்தராதர உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்களின் நிலை தொடர்பில் மாகாண ரீதியாக நோக்குகின்ற போது கிழக்கு மாகாணம் 2010 ஆண்டு 4ம் இடத்தினை பெற்ற மாகாணமாகவும், 2011ம் ஆண்டு 6ம் இடத்தினையும் 2012ம் ஆண்டு 5ம் இடத்தினையும், 2013ம் ஆண்டு 5ம் இடத்தினையும், 2014ம் ஆண்டு 5ம் இடத்தினையும், 2015ம் ஆண்டு 8ம் இடத்தினையும் பெற்றுள்ளது. இதனடிப்படையில் பார்க்கின்ற போது கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை ஆரம்பத்தில் 4ம் இடத்திலிருந்து பின்னோக்கி 6ம் இடத்திற்கு சென்று மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக 5ம் இடத்திலே இருந்து சடுதியாக 8ம் இடத்திற்கு மாகாணத்தின் கல்வி நிலை பின்னோக்கி சென்றுள்ளமையை கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையின் வீழ்ச்சியை எடுத்துக்காட்டுகின்றது.
5அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கு முதலாம் தடவை தோற்றிய பாடசாலை பரீட்சார்த்திகளில் மாவட்ட அடிப்படையில் கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தகுதி பெற்றவர்கள் தொடர்பில் நோக்குகின்ற போது அம்பாறை மாவட்டத்தில் 2014ம் ஆண்டு 8751பேர் தோற்றி 6038பேர் உயர்தரத்திற்கு தகுதிபெற்றுள்ளனர். இதனடிப்படையில் அம்பாறை 9வது மாவட்டமாக இருந்தது. 2015ம் ஆண்டு 8869பேர் தோற்றி 5995 உயர்தரத்திற்கு தகுதிபெற்று 13வது இடத்தினை பெற்ற மாவட்டமாக உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2014ம் ஆண்டு 6445பேர் தோற்றி 4274பேர் உயர்தரத்திற்கு தகுதி பெற்று 15வது இடத்தினை பெற்றுள்ளது. 2015ம் ஆண்டு 7171பேர் தோற்றி 4590பேர் உயர்தரத்திற்கு தகுதி பெற்று 17வது இடத்தினைப்பெற்ற மாவட்டமாக உள்ளது. திருகோணமலை மாவட்டம் 2014ம் ஆண்டு 4968பேர் தோற்றி 3139பேர் உயர்தரத்திற்கு தகுதி பெற்று 21வது இடத்தினை பெற்ற மாவட்டமாக உள்ளது. 2015ம் ஆண்டு 5653பேர் தோற்றி 3199பேர் சித்திபெற்று உயர்தரத்திற்கு தகுதி பெற்று 23வது மாவட்டமாக உள்ளது. கிழக்கு மாகாணத்தின் உள்ள மூன்று மாவட்டங்களின் கல்வி நிலையை தரவுகளின் அவதானிக்கின்ற போது 2014ம், 2015ம் ஆண்டுகளில் அம்பாறை மாவட்டம் முதலிடத்திலும், மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடத்திலும் திருகோணமலை மாவட்டம் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றமையை காணமுடிகின்றது. மொத்த மாவாட்டங்களின் அடிப்படையிலும் பார்க்கின்ற போது 2014ம் ஆண்டு இருந்த நிலையில் இருந்து 2015ம் ஆண்டு பின்னோக்கியே சென்றிருக்கின்றது.
இலங்கையில் மொத்தமாக 98கல்வி வலயங்கள் காணப்படுகின்றது. அவ்வாறன கல்வி வலயங்களின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்வி வலயங்களின் நிலை தொடர்பில் நோக்குகையில் 2015ம் ஆண்டு மட்டக்களப்பு மத்தி வலயத்தில் 5அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் 1650பேர் தோற்றி 1282பேர் சித்திபெற்று உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர்இது மொத்த வலயங்களின் அடிப்படையில் 7வது இடத்தினை பெற்ற வலயமாக உள்ளது.
அக்கரைப்பற்று வலயத்தில் 1064பேர் தோற்றி 812 தகுதி பெற்று 11வது இடத்தினை பெற்ற வலயமாக உள்ளது. கல்முனை வலயம் 2149 பேர் தோற்றி 1593பேர் தகுதி பெற்று 17வது இடத்தினை பெற்ற வலயமாக உள்ளது. அம்பாறை வலயம் 2174பேர் தோற்றி 1442பேர் தகுதி பெற்று 47வது இடத்தினை பெற்ற வலயமாக உள்ளது.
மட்டக்களப்பு வலயம் 2152பேர் தோற்றி 1421பேர் தகுதி பெற்று 49வது வலயமாக உள்ளது. சம்மாந்துறை வலயத்தில் 1267பேர் தோற்றி 798பேர் தகுதி பெற்று 64வது வலயமாக உள்ளது. 832பேர் தோற்றி 523பேர் தகுதி பெற்று 65வது வலயமாக உள்ளது. திருகோணமலை வலயம் 1690பேர் தோற்றி 1040தகுதி பெற்று 72வது வலயமாக உள்ளது. மகாஓயா வயலம் 522பேர் தோற்றி 316பேர் தகுதி பெற்று 74வது வலயமாக உள்ளது. பட்டிருப்பு வலயத்தில் 1356பேர் தோற்றி 818பேர் தகுதி பெற்று 76வது வலயமாக உள்ளது.
தெகித்தகண்டிய வலயம் 861பேர் தோற்றி 511தகுதி பெற்று 80வது வலயமாக உள்ளது. கந்தலே வலயம் 879பேர் தோற்றி 518தகுதி பெற்று 82வது வலயமாக உள்ளது. கல்குடா வலயம் 1071பேர் தோற்றி 608பேர் தகுதி பெற்று 87வது வலயமாக உள்ளது. கிண்ணியா வலயம் 1299பேர் தோற்றி 737 தகுதி பெற்று 88வது வலயமாக உள்ளது. மூதூர் வலயம் 1216பேர் தோற்றி 650பேர் தகுதி பெற்று 92வது வலயமாக உள்ளது. மட்டக்களப்பு மேற்கு வலயம் 942பேர் தோற்றி 461பேர் தகுதி பெற்று 95வது வலயமாக உள்ளது. திருகோணமலை வடக்கு வலயம் 569பேர் தோற்றி 254பேர் தகுதி பெற்று 98வது வலயமாக உள்ளது.
இத்தரவுகளின் அடிப்படையில் வைத்து பார்க்கின்றபோது கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்வி வலயங்கள் பல 63வது இடத்திற்கு மேற்பட்ட இடத்தினை பெற்ற வலயங்களாகவே இருக்கின்றது. 5வலயங்களே 50கீழ்ப்பட்ட இடங்களை கொண்ட கல்வி வலயங்களாக இருக்கின்றது.
இலங்கை பூராகவும் பாடப்பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் பிரதான ஆறு பாடங்களில் பௌத்தசமயம் 2014ம் ஆண்டு 84.38சித்தி வீதத்தினையும், 2015ம் ஆண்டு 89.68வீதத்தினையும் சைவநெறி 2014ம் ஆண்டு 89.65வீதத்தினையும், 2015ம் ஆண்டு 87.07வீதத்தினையும் கத்தோலிக்கம் 2014ம் ஆண்டு 97.38வீதத்தினையும் 2015ம் ஆண்டு 96.15வீதத்தினையும், கிறிஸ்தவசமயம் 2014ம் ஆண்டு 92.63வீதத்தினையும் 2015ம் ஆண்டு 92.29வீதத்தினையும் இஸ்லாம் 2014ம் ஆண்டு 96.47வீதத்தினையும் 2015ம் ஆண்டு 94.56வீதத்தினையும், சிங்களமொழி 2014ம் ஆண்டு 87.61வீதத்தினையும் 2015ம் ஆண்டு 89.23வீதத்தினையும், தமிழ்மொழி பாடத்தில் 2014ம் ஆண்டு 78.12வீதத்தினையும் 2015ம் ஆண்டு 81.04வீதத்தினையும், ஆங்கிலப்பாடத்தில் 2014ம் ஆண்டு 45.08வீதத்தினையும் 2015ம் ஆண்டு 45.40வீதத்தினையும், கணிதபாடம் 2014ம் ஆண்டு 56.70வீதத்தினையும், 2015ம் ஆண்டு 55.18வீதத்தினையும், வரலாறு பாடம் 2014ம் ஆண்டு 79.10வீதத்தினையும், 2015ம் ஆண்டு 74.06வீதத்தினையும், விஞ்ஞான பாடத்தில் 2014ம் ஆண்டு 60.58வீத்தினையும், 2015ம் ஆண்டு 68.02வீத்தினையும் பெற்றுள்ளனர்.
அகில இலங்கை ரீதியான பிரதான ஆறு பாடங்களின் தரப்படுத்தலில் அதிக புள்ளிகளை பெற்ற 61 பாடசாலைகளுள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரேஒரு பாடசாலையே இதற்குள் இடம்பிடித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின் சேனநாயக்கா மத்திய மகா வித்தியாலயமே அவ்வாறு இடம்பிடித்து 44வது இடத்தினை பெற்றுள்ளது.
பிரதான ஆறுபாடங்களின் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் முதல் 10இடங்களை பெற்ற மாணவர்களில் கிழக்கு மாகாணத்தினைச்சேர்ந்த எந்தவொரு மாணவர்களும் 2015ம் ஆண்டு பெற்றுக்கொள்ளவில்லை என்பதும் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையை படம்பிடித்து காட்டுகின்றது.
கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாகாணம் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி காண்பது மிகக்கடினமாக குறிப்பாக தமிழ் பிரதேசங்கள் இருந்தாலும் கல்வியினூடாகவும் அபிவிருத்தி காணமுடியாத நிலையிலே கிழக்கு மாகாணம் இருந்து கொண்டிருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களும், வளங்களும் ஒழுங்குமுறையாக கிடைக்கும் பட்சத்திலேயே கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை வளர்ச்சியடையும். ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கின்ற நேரத்திலும் ஆசிரிய சேவைக்கு உள்வாங்காமல் காலத்தினையும் நீடித்து கொண்டு செல்வதினால் பல மாணவர்களின் வாழ்க்கையும், எதிர்பார்ப்பும் சிதறடிக்கப்படுகின்றதான நிலை ஏற்படும் என்பதும் பலரது கருத்தாகவும் இருக்கின்றது. இவ்வாறான குறைகளை நிவர்த்தி செய்யும் வேலைகளை விரைவாக கிழக்குமாகாணசபை முன்னெடுக்க வேண்டியதும் இன்றைய தேவையே.

