தேசிய பக்கவாத தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவனி கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்றது.
பக்கவாதம் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் நோக்கில், இலங்கை தேசிய பக்கவாத சங்கம், இந்த நடைபவனியை ஏற்பாடு செய்யதிருந்தது.
உலகிலேயே அதிகளவானோர் உயிரிழந்தமைக்கு காரணமாக அமைந்த இரண்டவது நோயாக, மூளைக்கான இரத்தவோட்டம் தடைப்படுவதால் ஏற்படும் பக்கவாதம் பதிவாகியுள்ளது.
இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி தெரிவித்த கருத்து…
பக்கவாதம் ஏற்படாமல் தடுப்பது எவ்வாறு என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். பக்கவாதம் என்ற சொல்லை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். புகைத்தல் மற்றும் மதுபாவனையால் அது ஏற்படுகின்றது. ஆகையால், புகைத்தல் மற்றும் மதுபாவனையால் ஏற்படும் பாரதூரமான விளைவுகள் தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர். அதனை அறிந்திருந்த போதிலும், தெளிவிருந்த போதிலும் அதனை பயன்படுத்தாதிருப்பதன் மூலமே பக்கவாதத்தை தவிர்க்க முடியும். ஆகவே, பக்கவாதம் சமூகத்திலிருந்து இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
இதேவேளை, முன்னாள் அரச சட்டத்தரணியும் முன்னாள் செனட் சபை உறுப்பினருமான எச்.ஶ்ரீ நிஸ்ஸங்கவின் 63ஆவது நினைவுதின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கலந்துகொண்டிருந்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பிப்பதற்கு பாரிய சேவையாற்றிய முன்னாள் செனட் சபை உறுப்பினர் எச். ஶ்ரீ நிஷ்ஷங்க இதன்போது நினைவுகூறப்பட்டார்.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேல் மகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி….
இன்று நாம் எதிர்நோக்கும் பிரச்சினை என்ன? இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும். எச்.ஶ்ரீ நிஷ்ஷங்க போன்றவர்கள் தொடர்பில் இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். ஒவ்வொரு யுகத்திற்கு உரியவர்கள் தொடர்பில் பேசப்பட்டாலும் அவர்களின் அர்பணிப்புக்கள் தொடர்பிலும் அவர்கள் தாய் நாட்டிற்கு செய்த சேவை தொடர்பிலும் நினைவுபடுத்த வேண்டும். இன்று உள்ளவர்கள் போன்று பணம் உழைப்பதற்காகவும் அரச திறைசேறியை தவறாக பயன்படுத்தவும் இல்லை. இந்த நாட்டின் இனப் பிரச்சினை தீரப்பதற்கு அன்று எஸ்.டபிள்யு. ஆர் .டி பண்டாரநாயக்க பாரிய சேவையாற்றினார். ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த டட்லி சேனாநாயக்கவிற்கு செல்வநாயகம் ஒத்துழைத்திருந்தால் நாம் அறிந்த வகையில் பிரபாகரன் ஒருவர் உருவாகியிருக்க மாட்டார்.


