இலஞ்ச குற்றச்சாட்டுக்கு இலக்காகும் கல்வி அதிகாரிகளுக்கு எதிராக புதிய சட்டங்களை கொண்டுவருவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்களை கடுமையாக அமுல்படுத்துவதற்குத் தேவையான பணிப்புரைகளை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண குறிப்பிட்டார்.
இத்தகைய முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகளை மேலும் விஸ்தரிப்பதற்காக, புதிய விசாரணை அதிகாரிகளை இணைத்து, பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் கூறினார்.
பாடசாலைகளின் தரம் ஒன்றிற்காக புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகளின் போது இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவங்கள் குறித்து ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் கல்வி அதிகாரிகள் மத்தியில் கொள்கை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பயிற்சித் திட்டமொன்றையும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன மேலும் குறிப்பிட்டார்.

