பேராதனைப் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் நாளை (04) நண்பகல் 12 மணிக்கு முன்னதாக விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதிகளில் ஒரு வகை காய்ச்சல் பரவுவதாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைக்காக சுமார் 500 மாணவர்கள் பல்கலைக்கழக சுகாதார நிலையத்தை நாடியுள்ளதாக துணைவேந்தர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாத காரணத்தினால், பல்கலைக்கழகத்தின் சகல கல்வி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மேலும் தெரிவித்தார்.

