கடந்த சில மணித்தியாலங்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துருகிரிய, மதவாச்சி, பொலன்னறுவை, தம்புள்ள ஆகிய பகுதிகளில் வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
கடுவெல – மாலபே வீதியின் அத்துருகிரிய – வெலிவிட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
டிப்பர் வாகனமும் காரும் இன்று அதிகாலை நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
மாலபே, கொட்டுகொட பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 28 வயதுகளையுடைய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் மதவாச்சி, கனதராவ பகுதியில் பஸ் நடத்துனர் ஒருவர் தாம் பணிபுரியும் பஸ்ஸிலேயே அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.
யாழ் – கொழும்பு, மன்னார் – கொழும்பு தனியார் பஸ்கள் ஒன்றுக்கொன்று போட்டியாகச் செல்ல முற்பட்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் 21 வயதுடைய மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இரண்டு பஸ்களினதும் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
பொலன்னறுவையிலும் தம்புள்ளயிலும் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


Post a Comment
Post a Comment