தேயிலை நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்படுமானால் அதற்கான சட்ட உறுதி பத்திரமும் வழங்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்




(க.கிஷாந்தன்)
களனிவெளி பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் டிக்கோயா டிலரி கீழ் பிரிவு தோட்டத்தில் 130 ஹெக்டயர் தேயிலை நிலபரப்பில் 100 ஹெக்டயர் தேயிலை நிலத்தை தேயிலை மரங்களுடன் அத்தோட்டத்தில் தொழில் செய்யும் 140 பேருக்கு பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இவ்வாறு தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுப்பதாக சொல்லப்படும் தேயிலை நிலங்களையும் அதில் காணப்படும் தேயிலை மரங்களையும் தொழிலாளர்களே தனது சொந்த பணத்தை செலவு செய்து பராமரிப்பதுடன் அத் தேயிலை மலைகளில் கொய்யப்படும் கொழுந்தினை தோட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரித்துக் கொடுக்கப்படும் தேயிலை மலைகளுக்கு எந்தவிதமான உறுதிப்பத்திரமும் வழங்கப்படாமல், அதனை பாரமரிக்க வேண்டும் என நிர்வாகம் முயற்சித்து வருவதற்கு அத்தோட்டத்தின் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
டிலரி கீழ் பிரிவு தோட்டத்தில் 130 ஹெக்டயர் தேயிலை நிலத்தில் சுமார் 33 ஹெக்டயர் காடாக்கப்பட்ட தேயிலை நிலம் தனி நபர் ஒருவருக்கு ஏற்கனவே பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இருந்தும் 100 ஹெக்டயர் தேயிலை நிலத்தில் அன்றாட தொழிலை பதிவு செய்யப்பட்ட 140 தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் இந்த 100 ஹெக்டயர் தேயிலை நிலத்தை தேயிலை மரங்களுடன் இந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கும் தொழிலாளர்கள் இந்த நிலங்களை எமக்கு வழங்க எந்தவிதமான உறுதி பத்திரமும் தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்படமாட்டாது என நிர்வாகம் தெரிவித்திருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளையில் பிரித்து தரப்படும் தேயிலை நிலங்களுக்கு ஆறு மாதங்களின் பின்பே அதனை பராமரிக்கும் குடும்பங்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்குவது தொடர்பாக ஆராய்யப்படும் எனவும் தொழிலாளர்களிடம் தோட்ட நிர்வாகம் தெரிவித்திருப்பதாக தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
பிரித்துக் கொடுக்கும் தேயிலை நிலங்களை பெற்றுக்கொண்டு அதனை பராமரித்து அதில் கொய்யப்படும் தேயிலையை குறித்த ஒரு விலைக்கு தோட்ட நிர்வாகத்திடம் கொடுப்பதனால் நஷ்டமாகும் எனவும் தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதேவேளை 25 நாட்கள் வழமையான வேலையை வழங்கிவிட்டு அதற்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை தோட்ட நிர்வாகம் வழங்குவதற்கு அப்பால் காடுகளாக்கப்பட்டு தனி நபர் ஒருவருக்கு வழங்கியுள்ள 33 ஹெக்டயர் தேயிலை நிலத்தையும் தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்று அதனை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தால் அதனை பராமரித்து அதில் கொய்யப்படும் தேயிலைகளை தோட்ட நிர்வாகத்திடம் வழங்குவது நல்ல ஒரு திட்டமாகும் எனவும் தொழிலாளர்கள் ஒருபுறம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கும் பட்சத்தில் பிரித்துக் கொடுக்கப்படும் நிலங்களுக்கு சட்ட ரீதியான உறுதிப்பத்திரத்துடன் கால எல்லையை நிர்ணயத்து வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கும் தொழிலாளர்கள் வெறுமனே தேயிலை நிலங்களை பெற்றுக்கொண்டு தமது சொந்த பணத்தில் அதனை பராமரித்து தோட்ட நிர்வாகத்திற்கு தேயிலையை வழங்கி நஷ்டமடைய தேவையில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் நன்கு ஆராய்ந்து தொழிலாளர்களுக்கு சார்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.