கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்துக!



(அப்துல்சலாம் யாசீம்)

வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களை இணங்கண்டு அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உத்தரவிட்டுள்ளார்.

முதல் தடவையாக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண 
ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறிலங்கா டீ கப் சைக்கிளோட்டப்போட்டி எதிர்வரும் மே மாதம் 04ம் திகதி பாசிக்குடாவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான கலந்துறையாடலொன்று இன்று (29) மட்டக்களப்பு நீர்பாசன திணைக்களத்தில் நடை பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.


பாசிக்குடாவில் ஆரம்பிக்கப்படவுள்ள சைக்கிளோட்டப்போட்டியில் 14 நாடுகளைச்சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் 70ற்கும் மேற்பட்ட ஓட்ட வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இதன் போது ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வாகரை .ஓட்டமாவடி,வாழைச்சேனை பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் இரவிலும், பகலிலும்
வீதிகளில் அதிகளவில் நிற்பதாகவும் அதனால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாகவும் ஆளுநர் இதன் போது குறிப்பிட்டார்.

இதேவேளை சைக்கிளோட்டம் ஆரம்பிக்க முன்னதாகவே மாட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு
பிரதேச சபைகளின் தலைவர்களுக்கும்,செயலாளர்களுக்கும் உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சேவைகள் திணைக்கள பணிப்பாளர்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்.சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.