காட்டு யானைகளைக் கட்டுக்குள் கொண்டு வர



(அப்துல்சலாம் யாசீம்)

வன ஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா திருகோணமலை மாவட்ட மக்கள் மிருகங்களினால் எதிர் நோக்கும் பிரச்சினைகள்  தொடர்பாக ஆராய்வதற்காக இன்று (19) திருகோணமலைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் திருகோணமலை மாவட்டங்களைச்சேர்ந்த  மக்கள்  பிரதிநிதிகளுடன் இக்கலந்துறையாடல் நடைஇபற்றது.

இக்கலந்துறையாடலில் திருகோணமலை மாவட்டத்தில் திரியாய், வெறுகல்,மொறவெவ மற்றும் கோமரங்கடவெல பிரதேச செயலகப்பிரிவில் அதிகளவில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் அதனால் கிராமமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை திருகோணமலை நகர்ப்பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் உப்புவௌி பிரதேச சபையின் தலைவர் டொக்டர் ஈ.ஜி.ஞானகுணாளன்  கோரிக்கை விடுத்தார்.அத்துடன்  மாவட்டத்தில் யானைகளின் தொல்லைகளில் இருந்து காப்பாற்ற  மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே தான் திருகோணமலைக்கு விஜயம் செய்தாகவும் ஒரு வருடத்திற்குள் அனைத்து யானை பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.



இக்கலந்துறையாடலில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பாராளமன்ற உறுப்பினர் கே.துரைரெட்ணசிங்கம் மற்றும் பிரதேச செயலாளர்கள், முப்படையின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.