#ஓட்டமாவடி காளி கோயில் தொடர்பான உண்மை வரலாறு இதுதான்.



அண்மைக் காலங்களில் ஓட்டமாவடியில் இருந்த ஓரு கோயில் காணி தொடர்பாக ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தெரிவித்திருந்த கருத்துக்களைக் கொண்ட கொணொளியொன்று சமூக வலைத்தளங்களிலும், உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் ஊடகங்களிலும் பரவி வந்திருக்கின்றது.
இது தொடர்பாக ஓட்டமாவடி பிரதேசத்தின் மூத்த பிரஜைகளுள் ஓருவரும், நன்கறியப்பட்ட எழுத்தாளரும், குறித்த சர்ச்சைக்குரிய காணி விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுள் ஓருவருமான SLM ஹனிபா அவர்கள் ஓரு காணொளியைப் பதிவு செய்திருக்கின்றார். குறித்த காணி அதன் உரிமையாளரிடமிருந்து பணக்கொடுக்கலின் மூலமாக உரிமை மாற்றம் பெற்றதாகவும் அந்தப் பணத் தொகையினைப் பெற்றுக் கொண்டவர்கள் வேறொரு கோயிலின் நிர்மாணப் பணிகளுக்காக அதனை கொடுத்தனர் என்றும் சொல்கின்றார்.
இதனடிப்படையில் பார்க்கும்போது ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வெளியிட்டிருக்கும் கருத்தானது தேர்தல் காலமொன்றில் குறித்தவொரு பிரதேச முஸ்லிம் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அவ்வாறு தெரிவித்திருக்கின்றார் என்று கருத வாய்புண்டு.
இவ்வாறான காயங்கள் இரண்டு பக்கங்களிலும் இருக்கின்றன. எனது சிறு பராயத்தில்(1985 க்கு முன்பு) அறுவடைக் காலங்களில் கோப்பாய்வெளி, இலுப்படிச்சேனை போன்ற பிரதேசங்களில் அமையப் பெற்றிருந்த பள்ளிவாயல்களில் சில நிகழ்வுகளை நடாத்தி அங்கு நார்சா (சமைத்த உணவு) வழங்குவார்கள். அதில் தமிழ் முஸ்லிம் இரு சமூக மக்களும்கலந்து கொள்வர்.
இன்று அந்தப் பள்ளிவாயல்கள் இருந்த தடயமே இல்லை. சில கற்கள் மாத்திரம் காணக் கிடைக்கின்றன.
இவ்வாறு இரு சமூகங்களுக்குள்ளும் ஆறா வடுக்கள் நிறைந்து கிடக்கின்றன. அவை இரு தரப்பு சிவில் சமூக பிரதிநிதிகளாலும் பேசித் தீர்க்கப்படல் வேண்டும் . இனத்துவ அரசியல் கூர்மையடைவதற்கு முன்பிருந்து ஓரு சுமுகமான இன உறவுச் சூழலில் துவங்கி இன்று வரை நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை அவதானித்து வந்திருக்கும் SLM ஹனிபா போன்ற மூத்த பிரஜைகள் விரல் விட்டு எண்ணக் கூடிய சொற்ப தொகையினரே இரு சமூகங்களுக்குள்ளும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
எனவே, அவர்களின் காலத்திலேயே இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு தமிழ் முஸ்லிம் உறவு பலப்படுத்தப்படல் வேண்டும் . அதற்கான உடனடித் தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாகவே கருதுகின்றேன் .