சஞ்சுவின் சதத்திற்கு மத்தியிலும் வெற்றி பெற்ற ஹைதராபாத்


பொதுவாக ஐபிஎல் போட்டிகளில் சதம் எடுக்கப்பட்டால் அந்த அணி வெற்றி பெறுவது உறுதியென நாம் ஊகிக்கலாம். ஆனால் எதிரணி அதைவிட சிறப்பான ஓர் ஆட்டத்தை வெளிப்படுத்தினால்?
வெள்ளியன்று நடைபெற்ற போட்டியில் இந்த நிலைமைதான் ஏற்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 102 ரன்களை எடுத்திருந்தார்.
இருப்பினும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
டாஸ் வென்றவுடன் ராஜஸ்தான் அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே அதிகப்படியான ரன்களை குவித்து போட்டியில் வெற்றி பெருவோம் என்று தெரிவித்தார்.
ஆனால், டேவிட் வார்னர் சிறப்பாக விளையாட தொடங்கியவுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பு குறைய தொடங்கியது. டேவிட் வார்னர் 37 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 69 ரன்களை எடுத்திருந்தார்.
அவருடன் இணைந்து ஆடிய ஜானி பேர்ஸ்டவும் 28 பந்துகளில் 45 ரன்களை குவித்தார். இவர்கள் கூட்டாக 110 ரன்களை குவித்திருந்தனர். இது ஹைதராபாத் அணிக்கு வலுவான அஸ்திவாரமாக அமைந்தது.
இவர்களின் ரன்களுடன் சேர்த்து விஜய் சங்கரின் 35 ரன்களும் ரஷித் கானின் 15 ரன்களும் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கை கொடுத்தன.
19ஆவது ஓவரில் வேக பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்சர் வீசிய ஐந்தாவது பந்தில் நான்கு ரன்களையும், ஆறாவது பந்தில் சிக்ஸரை அடித்தும் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார் ரஷித் கான். யூசஃப் பதானும் 15 ரன்களை எடுத்திருந்தார்.
ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் ரஹானே தோல்வி குறித்து வருத்தம் தெரிவித்தார். தங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்த அவர், வார்னர் மற்றும் பிற பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.
இதற்கு முந்தைய போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 85 ரன்களை எடுத்திருந்தார் வார்னர். இருப்பினும் ஐதராபாத் அணி தோல்வியை சந்தித்தது. நேற்றைய போட்டியின் மூலம் ஹைதராபாத் தனது வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது.

செஞ்சூரியும் கைகொடுக்கவில்லை

முன்னதாக டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 198 ரன்களை எடுத்திருந்தபோதும் அந்த அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை.
அந்த அணியின் ஜோஸ் பட்லர் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ரஷித் கானின் பந்தில் `போல்ட்` ஆனார். ஆனால் அதன்பிறகு ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பரான ரஹானேவுக்கு சஞ்சு சாம்சனின் உதவி கிடைத்தது. இருவரும் சேர்ந்து 119 ரன்களை எடுத்தனர்.
70 ரன்களை எடுத்த பிறகு மனிஷ் பாண்டேவிடம் பந்தை கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ரஹானே. அவரை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் களம் இறங்கினார்.
சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டோக்ஸ் இணைந்து வெறும் நான்கு ஓவர்களில் 64 ரன்களை எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 16 ரன்களை எடுத்திருந்தார்.
சஞ்சுபடத்தின் காப்புரிமைBCCI
ஆனால் சஞ்சு சாம்சன் இந்த ஐபிஎல் போட்டி தொடரின் முதலாது சதம் அடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அவர் ஆட்டமிழக்காமல் 102 ரன்களை குவித்தார்.
55 பந்துகளில் நூறு ரன்களை எடுத்த சஞ்சு, 10 பவுண்டரிகளும். 4 சிக்ஸர்களும் விளாசியிருந்தார்.
ராகுல் டிராவிடின் பங்கு
சஞ்சு சாம்சனுக்கு இது ஐபிஎல்லின் இரண்டாவது சென்சூரி. முன்னதாக 2017ஆம் ஆண்டு டெல்லி அணியில் இருந்த அவர், புனே அணிக்கு எதிராக 63 பந்துகளில் 102 ரன்களை எடுத்திருந்தார். அதுவும் அந்த சீசனின் முதல் சதமாகும்.
இந்த சதங்களுக்கு முன்னதாக சஞ்சு சாம்சனின் அதிகபட்ச ரன்கள் 87 ஆகும். 2015-16 முஷ்டக் அலி போட்டிகளில் ஜார்கண்ட அணிக்கு எதிராக இந்த ரன்ணை அவர் எடுத்திருந்தார். சஞ்சு சாம்சன் பேட்ஸ்மேன் மட்டும் கிடையாது. விக்கெட் கீப்பரும் கூட.
2012ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் கிடைத்த போதும்கூட விளையாடுவதற்கான வாய்ப்பு சஞ்சுவிற்கு கிட்டவில்லை.
அதன்பின் 2013ஆம் ஆண்டு அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்ந்தார். சஞ்சு சாம்சனின் வளர்ச்சியில் ராகுல் டிராவிட்டுக்கும் பங்கு உண்டு.
டிராவிட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
2016ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ராகுல் டிராவிட்டின் பரிந்துரையில் சஞ்சு சேர்க்கப்பட்டார். அந்த சமயம் ராகுல்தான் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்தார்.
அந்த ஆண்டு டெல்லி அணியில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார் சஞ்சு சாம்சன்.
வெற்றிப் பெற்ற ஹைதராபாத்
ஹைதராபாத்தின் சிறப்பான பந்து வீச்சையும் அசைய வைத்தது ரஹானே மற்றும் சஞ்சுவின் ஆட்டம்.
இருப்பினும் போட்டி நடந்த ஐதராபாத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி.
இன்று சனிக்கிழமை, முதல் போட்டி பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலும், இரண்டாவது போட்டி டெல்லி மற்றும் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலும் நடைபெறவுள்ளன.