’கிரியைகளை மேற்கொள்ள இனி தடையில்லை’


-வடமலை ராஜ்குமார்
கன்னியா வெந்நீருற்று கோவில் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவின் ஊடாக இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அனுபவிக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில், திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் தடையுத்தரவை பெற்ற பின்னர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், சுமந்திரன் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,  “நீண்டகாலமாக நிலவி வந்த கன்னியா வெந்நீரூற்று ஆதனத்தின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. மிக அவசரமான  நான்கு விடயங்களுக்கும் நீதி மன்றத்தால் இன்று தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, இன்னுமொரு கோரிக்கையையும் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது. அதாவது, இந்த வெந்நீருற்றுகளில்தான் இறந்த தங்களுடைய மூதாதைகளுக்கான பிதுர் கடன்களை இந்து சமயத்தவர் செய்வது வழக்கம்.
விசேடமாக ஆடி ஆமாவாசையன்று இதனை அனைவரும் மேற்கொள்வது வழக்கம். எதிர்வரும் 31ஆம் திகதி இந்த ஆடி அமாவாசை தினம் வருவதால், இந்து பக்தர்கள் அங்கு செல்வதை தடுக்கக் கூடாது என்ற தடையுத்தரவு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே, எந்த தடையும் இல்லாது இந்துக்கள் ஆடி அமாவாசை தினத்தில் தங்களது கிரியைகளை மேற்கொள்ள முடியும்” என்றார்.