#Ashes ஆஷஸின் சாம்பலில் இருந்து இங்கிலாந்தை உயிர்ப்பித்த பென் ஸ்டோக்ஸ்!


இங்கிலாந்தின் தீராக் கனவான உலகக் கோப்பையைத் தன் போராட்டத்தால் வென்று கொடுத்தார். அதைவிட பெரிதாய் கருதப்படும் ஆஷஸ் தொடரின் முடிவைத் தன் ஒரு இன்னிங்ஸால் மாற்றியிருக்கிறார். சோர்ந்து போயிருந்த டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு மகத்தான கிளாசிக்கைப் பரிசளித்திருக்கிறார்...
Ben Stokes
Ben Stokes ( AP )
அக்டோபர் 1, 2017
'பென் ஸ்டோக்ஸ் இல்லாதது இங்கிலாந்துக்கு பெரிய இழப்பு : ஆனால், இங்கிலாந்து தனியொரு வீரரால் உருவான அணி இல்லை'.
இது, அன்றைய எக்ஸ்பிரஸ் நாளிதழ் கட்டுரையின் தலைப்பு. 2017 - 18 ஆஷஸ் தொடருக்கு முன்பாக எழுதப்பட்ட கட்டுரை. பிரிஸ்டல் பாரில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக, ஸ்டோக்ஸ் அணியிலிருந்து நீக்கப்படலாம் என்று அறிவித்திருந்தது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். அவர் இல்லாமலும் ஆஸ்திரேலியாவுக்கு சவால் அளிக்க முடியும் என்று நினைத்தார்கள். இங்கிலாந்து, ஆஷஸைத் தக்கவைக்கும் என்று நினைத்தார்கள். ஸ்டோக்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்து 0 - 4 என்று ஆஷஸ் தொடரை இழந்தது.
Ben Stokes
Ben Stokes
AP
இரண்டு ஆண்டுகள் கழித்து...
"இது ஏன் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஷஸ்..."
"ஏன் இங்கிலாந்து இந்த ஆஷஸ் தொடரை இழந்தது?"
"வாய்ப்புகளைத் தவறவிட்ட இங்கிலாந்து : ஆஷஸை இப்போதே இழந்துவிட்டதுபோல் இருக்கிறது."
இவை, விஸ்டன், இண்டிபெண்டென்ட், பிபிசி போன்ற முன்னணி இதழ்களில், கடந்த இரண்டு நாள்களாக இடம்பெற்றிருந்த கட்டுரைகளின் தலைப்புகள். இங்கிலாந்து அணி 67 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனபோது, இந்தத் தொடரே முடிவுக்கு வந்துவிட்டதாகத்தான் அனைத்து ஊடகங்களும் எழுதின. ஆனால், ஆஷஸின் சாம்பலில் இருந்தே எழுந்து வந்திருக்கிறது இங்கிலாந்து அணி. அதற்கு உயிர் கொடுத்து தட்டி எழுப்பியிருக்கிறார், பென்ஜமின் ஆண்ட்ரூ ஸ்டோக்ஸ்.
நான்காவது இன்னிங்ஸில், 359 ரன்கள் என்பது சாதாரண விஷயமில்லை. பிராக்டிகலாக யோசித்தால், இந்தப் போட்டியில் அது சாத்தியமே இல்லை. அதுவும் முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு..?! டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு செட் ஆக முடியாமல் தடுமாறும் ஒரு ஒருநாள் ஓப்பனர், இன்னும் எந்த ஃபார்மட்டிலும் தன்னை நிரூபிக்காத ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் பல மாதங்களாக சொதப்பிக்கொண்டிருக்கும் விக்கெட் கீப்பர், இந்தத் தொடரில் இன்னும் தன் தரத்தை நிரூபிக்காத கேப்டன்... அப்படியும் அந்த இலக்கை சேஸ் செய்திருக்கிறது இங்கிலாந்து. இந்தத் தனி ஒருவனால்..!
*****
Ben Stokes
Ben Stokes
AP
ஆகஸ்ட் 17, 2019
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி. இரண்டாவது இன்னிங்ஸ். இங்கிலாந்து 71-4. முதல் இன்னிங்ஸ் முன்னிலையோடு சேர்த்து 79-4. ஆஸ்திரேலிய பௌலர்கள் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் 100-150 ரன்களாவது எடுத்தால்தான் தப்பிக்க முடியும். இல்லையேல், இந்தப் போட்டியிலும் தோல்விதான். ஒரு ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோற்றுவிட்டால் அவ்வளவுதான். அந்த இடத்திலேயே தொடர் முடிந்துவிடும். ஆனால், அதை மாற்றி எழுதியது ஸ்டோக்ஸ் - பட்லர - பட்லர் : கிரிக்கெட் கண்டெடுத்திருக்கும் புதிய மிரட்டல் ஜோடி! 

ஒவ்வொரு முறையும் போட்டியின் முடிவை மாற்றக்கூடிய வகையில், ஓர் அற்புத பார்ட்னர்ஷிப் அமைத்துவிடுகிறார்கள் இவர்கள். உலகக் கோப்பை ஃபைனலில் இவர்கள் போட்டியை மாற்றியது நாம் அறிவோம். ஆனால், இந்தப் போட்டியின் முடிவையும் இந்த ஜோடிதான் மாற்றி எழுதியது. 21-வது ஓவரில் இணைந்த இவர்கள், அடுத்த 220 பந்துகள், விக்கெட் ஏதும் விழாமல் களத்தில் நின்றார்கள். தோல்வியைத் தவிர்த்தார்கள்.
Ben Stokes &  Jack Leach
Ben Stokes & Jack Leach
AP
பட்லர் அவுட்டானதும், யாரும் எதிர்பாராத விஸ்வரூபம் எடுத்தார் ஸ்டோக்ஸ். 118 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தவர், அடுத்த 47 பந்துகளில் 61 ரன் எடுத்தார். இங்கிலாந்தின் முன்னிலை 266 ரன்களானது. இன்னும் 48 ஓவர்கள் இருந்த நிலையில், இப்போது தோல்வியைத் தவிர்க்கப் போராடவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானது ஆஸ்திரேலியா! ஆட்டத்தின் போக்கை, வெறும் 47 பந்துகளில் மொத்தமாக மாற்றினார் ஸ்டோக்ஸ்... தனி ஆளாக!
*****
ஆகஸ்ட் 25, 2019
நேற்றும் பட்லர் - ஸ்டோக்ஸ் இணையும்போது, இப்படியொரு பார்ட்னர்ஷிப் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக பட்லர் ரன் அவுட்டாக, எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தார்கள். இங்கிலாந்தின் இன்னிங்ஸ், இந்தப் போட்டி, ஏன் இந்த ஆஷஸ் தொடரே முடிந்துவிட்டதாகத்தான் நினைத்தார்கள். ஆனால், வெறிகொண்ட வேங்கையாக ஒருவன் போராடும்போது, போராட்டம் தொடர்ந்துதானே ஆக வேண்டும்.
Ben Stokes
Ben Stokes
AP
கடைசி விக்கெட்டுக்கு 73 ரன்கள் தேவை. அடுத்த ஒன்றரை நாளில் குறைந்தபட்சம் 140 ஓவர்களாவது விளையாட வேண்டும். நிச்சயம், பைனரி ரிசல்ட்தான். டிரா செய்ய வாய்ப்பே இல்லை. இப்படியான நிலையில், ஸ்டோக்ஸ் ஆடியிருப்பது ஏலியன் லெவல் ஆட்டம். நாதன் லயானின் பந்தில் ஸ்விட்ச் ஹிட் ஆடி சிக்ஸ் அடித்தது ஆச்சர்யம் என்றால், ஹேசில்வுட் வீசிய யார்க்கரை, ஸ்வீப் செய்து சிக்ஸர் அடித்தது வெறித்தனத்தின் உச்சம்! தரமான, அனுபவமிக்க பௌலர்களை எதிர்த்து ஆடும்போது, இப்படி Unorthadox ஷாட்டுகள் அடிக்க 200 சதவிகிதம் நம்பிக்கை வேண்டும்! ஸ்டோக்ஸின் அந்த நம்பிக்கை அபாரமானது.
லயான் அரௌண்டு தி ஸ்டம்ப்பிலிருந்து பந்து வீசிக்கொண்டிருக்கிறார். ஒரு பந்து ஸ்டம்ப் லைனில் பிட்சாகி, சுழன்று வெளியேறுகிறது; ஒரு பந்து அதே லைனில் பிட்சாகி, சுழலாமல் ஸ்டம்பை நோக்கி பாய்கிறது; அடுத்த பந்தோ, ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் பிட்சாகிறது. இப்படி ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு லைனில் வீசுகிறார் லயான்.
Ben Stokes
Ben Stokes
AP
ஒரு தரமான ஆஃப் ஸ்பின்னரின் பந்துவீச்சை அப்படி அடித்து ஆட நினைப்பது எளிதல்ல. ஏன் டி-20 போட்டிகளில் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு விக்கெட் வீழ்வதில்லையென்றால், லெக் ஸ்பின்னர்களை டார்கெட் செய்வதுபோல், பேட்ஸ்மேன்கள் ஆஃப் ஸ்பின்னர்களை டார்கெட் செய்வதில்லை. டார்கெட் செய்தாலும், ரன் அடிப்பது சிரமம். விக்கெட்டை இழப்பது எளிது! ஆனால், ஸ்டோக்ஸ் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. யோசிக்காமல் ஸ்வீப் செய்தார். லாங் ஆஃப் ஃபீல்டர் இருந்தாலும், அந்த ஏரியாவில் யோசிக்காமல் சிக்ஸர்கள் பறக்கவிட்டார். லயானை திக்குமுக்காடச்செய்ய ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் என அனைத்தும் ஆடினார். எந்த பேட்டிங் ஆர்டரையும் பதம் பார்க்கும் லயானின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார் ஸ்டோக்ஸ்... தனி ஒருவனாக!
*****
ஆகஸ்ட் 6, 2018
பிரிஸ்டல் பார் சம்பவம் இவரை இன்னும் விடவில்லை. அதன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் ஸ்டோக்ஸ். இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியவில்லை.
செப்டம்பர், 2018
பார் நிகழ்வு, ட்விட்டர் போஸ்ட் என இரண்டு சம்பவங்கள் ஸ்டோக்ஸின் கழுத்தைச் சுழன்றுகொண்டிருந்தன. கிரிக்கெட்டின் மதிப்பைக் கெடுத்ததாக, ஸ்டோக்ஸ் மீது குற்றம் சுமத்துகிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
Ben Stokes
Ben Stokes
AP
டிசம்பர், 2018
ஸ்டோக்ஸின் நடவடிக்கைகளுக்கு 30,000 பவுண்டுகள் அபராதமும், எட்டு போட்டிகளில் விளையாடத் தடையும் விதிக்கிறது ஒழுங்கு நடவடிக்கைக் குழு
கிட்டத்தட்ட 16 மாதங்கள், ஸ்டோக்ஸின் வாழ்க்கை இப்படியாகவே கழிந்துகொண்டிருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அத்தனை குற்றச்சாட்டுகள், அவப்பெயர்கள். இங்கிலாந்தின் மகத்தான வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு வீரன், கிரிக்கெட் அரங்கில் சிரம் தாழ்ந்து நின்றிருந்தான்.
சரி, எல்லாம் ஓய்ந்துவிட்டது. ஆனால், உலகம் ஸ்டோக்ஸுக்குக் கொடுக்கும் அடையாளம் என்னவாக இருக்கும்? இந்தக் கறையே அவரின் அடையாளமாக மாறிவிட்டால்? இந்தக் கேள்வி நிச்சயம் அவருக்கு எழுந்திருக்கும். தன் அடையாளத்தை மாற்றி எழுத வேண்டும் என்ற வெறி... தான் தொட நினைத்த உயரத்தைத் தொட வேண்டும் என்ற தாகம்... பென் ஸ்டோக்ஸ் ஒரு அரக்கனாக மாறுகிறார். ஹிட்டிங், டிஃபண்டிங், பார்ட்னர்ஷிப் மேக்கிங், பௌலிங், ஃபீல்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து டிபார்ட்மென்டிலும், அனைத்து டெக்னிக்கிலும் டிஸ்டிங்ஷன் அடையும்போது, தன் மீதான நம்பிக்கை அங்கு உச்சம் தொடும்போது, தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வெறி தீயாய்ப் பற்றி எரியும்போது, ஒரு வீரன் எப்படி இருப்பான் - இந்த பென் ஸ்டோக்ஸ் போல்!
Ben Stokes
Ben Stokes
AP
இதுவரை இங்கிலாந்து கிரிக்கெட் பார்த்திடாத ஒரு தனித்துவத்தை அடைந்துகொண்டிருக்கிறார், ஸ்டோக்ஸ். இங்கிலாந்து கிரிக்கெட்டின் தீராக் கனவான உலகக் கோப்பையைத் தன் போராட்டத்தால் வென்று கொடுத்தார். இங்கிலாந்து மக்கள், அதை விடப் பெரிதாய் நினைக்கும் ஒரு ஆஷஸ் தொடரின் முடிவைத் தன் ஒரு இன்னிங்ஸால் மாற்றியிருக்கிறார். சோர்ந்து போயிருந்த டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு மகத்தான கிளாசிக்கைப் பரிசளித்திருக்கிறார்... எல்லாம் தனி ஒரு ஆளாக.
இவரது இந்தப் போராட்டங்களைப் பற்றி என்ன சொல்வது? நேற்று, கவர் திசையில் வெற்றிக்கான பௌண்டரியை இவர் அடித்ததும் நாசர் உசேன் சொன்னதுதான்... "Take a bow Ben Stokes!"