சச்சின் டெண்டுல்கர் - பென் ஸ்டோக்ஸ் : ஐசிசியின் பதிவால் ரசிகர்கள் கடும் அதிருப்தி

உலகக்கோப்பை இறுதி போட்டி மற்றும் அண்மையில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெல்ல பெரும் காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் இந்திய ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட ட்விட்டர் செய்தியொன்று சமூகவலைத்தளத்தில் சச்சின் ரசிகர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஜூலை 14-ஆம் தேதி நடந்த உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்த பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து உலகக்கோப்பை சாம்பியனாக முக்கிய காரணமாக இருந்தார்.
இதற்கு அடுத்த நாள் ஐசிசி தனது ட்விட்டர் பதிவில், சச்சின் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இணைந்திருந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைத்து காலகட்டங்களிலும் உலகின் அதிசிறந்த கிரிக்கெட்டரும் (பென் ஸ்டோக்ஸ்) சச்சின் டெண்டுல்கரும் என்று குறிப்பிட்டிருந்தது.
'தலைசிறந்த கிரிக்கெட் பெண் ஸ்டோக்ஸும், சச்சினும்' - ஐசிசியின் பதிவால் சச்சின் ரசிகர்கள் அதிருப்திபடத்தின் காப்புரிமைCLIVE MASON/GETTY IMAGES
இது சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
இதேபோல் அண்மையில் நடந்துமுடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வெல்ல காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸின் இன்னிங்க்ஸ் குறித்து பல கிரிக்கெட் வல்லுனர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் என பல முன்னாள் வீரர்கள் பெண் ஸ்டோக்ஸுக்கு புகழாரம் சூட்டினார்கள்
ஆஷஸ் போட்டி வெற்றிக்கு பிறகு தற்போது மீண்டும் தான் முன்பு வெளியிட்ட சச்சின் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இணைந்திருந்த புகைப்படத்தை பகிர்ந்த ஐசிசி 'நாங்கள் முன்பே கூறினோம் அல்லவா' என்ற வாசகத்தை இணைத்திருந்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த சச்சின் டெண்டுல்கர் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தனர்.
''டெஸ்ட் போட்டிகளில் 15, 921 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 18426 ரன்களும் எடுத்த சச்சின் எங்கே? 3749 டெஸ்ட் ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2628 ரன்களும் எடுத்த பென் ஸ்டோக்ஸ் எங்கே? என்ன ஒப்பீடு இது?'' என்று சச்சின் ரசிகரான நிக் என்பவர் வினவியிருந்தார்.
ஐசிசியின் பதிவால் சச்சின் ரசிகர்கள் அதிருப்திபடத்தின் காப்புரிமைTWITTER
''இது போன்ற பதிவுகளை வெளியிட்ட ஐசிசி மீது பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ட்விட்டரில் ஒரு ரசிகர் வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தார்.
நல்ல நகைச்சுவை இது. மலைக்கும், மடுவுக்கும் என்ன சம்பந்தம்? என்று கிரெய்க் குறிப்பிட்டுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரர்தான், ஆனால் சச்சின் டெண்டுல்கரோடு ஒப்பிடும் அளவுக்கு அவருக்கு அனுபவமும், ஆட்டத்திறனும் இல்லை என்பது சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.


Advertisement