”குண்டுதாரியின் உடற் பாகங்களைப் புதைக்க அனுமதி வழங்கவில்லை”


வா.கிருஸ்ணா,  எம்.எஸ்.எம்.நூர்தீன்
சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் உடற்பாகங்களைப் புதைப்பதற்கு, எந்தவித அனுமதியையும் தாம் வழங்கவில்லையென, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமாரும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவனும் தெரிவித்துள்ளனர்.
மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார்
“தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகங்கள் அடக்கம் செய்யப்பட்டமை தொடர்பாக, எனது தனிப்பட்ட பெயருக்கும், எனது அரச சேவைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், சிலர் பொய்யான தகவலை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
“மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானின் கட்டளையொன்று, மாவட்டச் செயலாளர் என்ற வகையில், எனக்கு 06.07.2019ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது.
“இந்தக் குண்டுதாரியின் தலைப்பாகங்கள், பிரேத பரிசோதனையின் பின்னர், அரசாங்க செலவில் அடக்கம் செய்யுமாறு, தங்களுக்குக் கட்டளையிடுகின்றேன் என, நீதிமன்றக் கட்டளையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், சம்பவம் இடம்பெற்றது, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு என்பதாலும், உடற்பாகங்கள் உள்ள வைத்தியசாலை அமைந்துள்ள இடமும் அதே பிரிவு என்பதாலும் நீதிமன்ற நியாயாதிக்க இடமும் அதுவேயாக இருந்ததாலும்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு, நான் ஒரு கடிதத்தை 10.06.2019 அன்று அனுப்பியிருந்தேன். அக்கடிதத்துடன், நீதிமன்றக் கட்டளையையும் இணைத்திருந்தேன்.
வனப் பகுதியில் இதை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தோம்; அது முடியவில்லை . இவ்வாறான உடற்பாகங்கள், பாதுகாப்பான இடத்தில் குறிப்பாக, மயானங்களிலேயே அடக்கம் செய்யப்படல் வேண்டுமெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கள்ளியங்காடு இந்து மயானத்தில், அந்த எச்சங்களை அடக்கம் செய்யுமாறு, நான் பணித்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அ​வை பொய்யாகும்.
மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன்
 “உடற்பாகங்களைப் புதைப்பது தொடர்பில், சில மாதங்களுக்கு முன்னர், மாவட்டச் செயலாளரால் எங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட எந்த மயானத்திலும் புதைப்பதற்கு, நாங்கள் அனுமதி வழங்கவில்லை.
“குறித்த மனித எச்சங்களைப் புதைப்பதற்கான அனுமதியைக் கோரி, ஒகஸ்ட் 26ஆம் திகதியன்று மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்குக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
“ஆனால், அந்தக் கடிதத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுப் பிரதி இணைக்கப்படவில்லை. அந்தக் காரணத்தாலும், குறித்த குண்டுதாரியின் எச்சங்களை, எமது பகுதியில் புதைப்பதற்கு அனுமதிப்பதில்லையென்ற காரணத்தாலும் நாங்கள் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.