குண்டுதாரியின் உடல் எச்சங்களை தோண்ட உத்தரவு

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரியின் உடல் எச்சங்களை உடனடியாக தோண்டியெடுக்க நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார். 

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீதான குண்டுத்தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன் 75க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். 

இந்த குண்டுத் தாக்குதலினை நடாத்தியதாக கருதப்படும் காத்தான்குடியை சேர்ந்த ஐஸ் தீவிரவாதியான முகமட் ஆஷாத் என்பவனின் தலைப்பகுதியும் உடற் பாகங்கள் சிலவும் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது. 

குறித்த உடற்பாகங்களை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு நீதிமன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் குறித்த உடற்பாகங்கள் உரிய அனுமதிகள் எதுவும் பெறப்படாத நிலையில் இரகசியமான முறையில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துடன் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. 

இந்த நிலையில் இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக கேட்டுக்கொண்டதற்கு இணங்கள் அரச தரப்பு சட்டத்தரணி ஆதவன் ஊடாக இன்று நீதிவான் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டு இது தொடர்பில் பிரத்தியேகமாக நீதிவானின் அறையில் ஆராயப்பட்டது. 

குறித்த இந்து மயானத்தில் எந்த அனுமதியும் பெறப்படாமல் புதைக்கப்பட்டதற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் குறித்த சடலத்தினை உடனடியாக அகற்றி பொருத்தமான இடம் கிடைக்கும் வரையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையிலேயே அவற்றினை வைப்பதற்கான உத்தரவினை விடுத்துள்ளார். 

இது தொடர்பான நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)


Advertisement