கொழும்பு டெஸ்டில் இலங்கையை துவம்சம் செய்து தொடரை சமன் செய்தது நியூசிலாந்து


இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. அன்றில் இருந்து நேற்றைய 4-வது நாள் ஆட்டம் வரை பெரும்பாலான பகுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

கொழும்பு மைதானத்தில் மழைநீரை வெளியேற்றும் வசதி சிறப்பாக உள்ளதால், மழை நின்றதும் உடனடியாக ஆட்டம் தொடங்கப்பட்டது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி 3-வது நாள் ஆட்டத்தின்போது 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் டாம் லாதம் 154 ரன்கள் குவித்தார். 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் வாட்லிங் உடன் கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். வாட்லிங் நிதானமாக விளையாட கிராண்ட்ஹோம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நியூசிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் குவித்திருந்தது. வாட்லிங் 81 ரன்னுடனும், கிராண்ட்ஹோம் 75 பந்தில் 83 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. கிராண்ட்ஹோம் நேற்று எடுத்திருந்த 83 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். ஆனால் வாட்லிங் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 431 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் 187 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது. விரைவாக விக்கெட்டுக்களை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதால் நியூசிலாந்து அணி விக்கெட் வீழ்த்தும் முனைப்பில் செயல்பட்டது.

தொடக்க வீரர் திரிமன்னே ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட்டும், குசால் பெரேரா போல்ட் பந்தில் டக்அவுட்டுமாக இலங்கை தடுமாறியது.

மெண்டிஸ் 20 ரன்கள் அடித்தாலும் மேத்யூஸ் (7), டி சில்வா (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த டிக்வெலலா, கருணாரத்னே அணியை காப்பாற்ற போராடினர். ஆனால் கருணாரத்னே 70 பந்தில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் டிக்வெல்லா நிலைத்து நிற்க மறுபக்கம் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் வீழந்தனர்.

டிக்வெல்லா 51 ரன்கள் எடுத்த நிலையில் 9-வது விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை 122 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காலேயில் நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றிருந்ததால் இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.