50 ரூபா கொடுப்பனவு எதிர்வரும் 10ம் திகதி கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாது


(க.கிஷாந்தன்)
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான 50 ரூபா கொடுப்பனவு நிலுவை கொடுப்பனவுடன் வழங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொட்டகலை லொக்கீல் தோட்டத்தில் சுமார் நீண்டகாலமாக செப்பணிடப்படாமல் இருந்த தோட்ட குடியிருப்புக்கு செல்லும் வீதியினை விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, கம்பெரலிய திட்டத்தின் ஊடாக 30 இலட்சம் ரூபா செலவில் பாதை செப்பணிடப்பட்டு 01.09.2019 அன்று அமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தொழிலாளர்களின் 50 ரூபா கொடுப்பனவு எதிர்வரும் 10ம் திகதி கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாது. ஆனால் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
''தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தத்துக்கு அமைவாக, 50 ரூபாய் நாளாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுதுடன், அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருந்தது.
ஆனால் இந்த விடயத்தில் அமைச்சர் ஒருவர் தடையாக இருப்பதனால் இன்னும் இழுத்தடிப்பாகவே இருக்கின்றது. தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக 50 ரூபா கொடுப்பனவை தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுக் கொடுக்கும்.
மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூட்டம் எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இதன்போது யாராக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இந்த கூட்டத்தில் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.