கனிமொழி எம்.பி, இலங்கையில்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தற்போது தாக்குதல் நடத்துவதில்லை. ஆனால், அசாம்பாவிதங்கள் தொடர்கின்றன என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவிக்கின்றார்.

சந்திப்பு

இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர், இலங்கை அமைச்சர்கள் சிலரை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தனர்.
கொழும்பிலுள்ள விவசாய அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கை சார்பில் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் , இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்தனர்.

இலங்கை கடற்படை

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்தியுள்ள போதிலும், சில சந்தர்ப்பங்களில் சில அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறுவதாகத் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்" எனவும் கூறியிருந்தார்.
இலங்கையில் கனிமொழி: "தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் இல்லை, அசம்பாவிதங்கள் தொடர்கின்றன"
கனிமொழியினால் முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டை இலங்கை அதிகாரிகள் மறுத்திருந்ததுடன், அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது எனவும் உறுதியளித்தனர்.
இந்திய மீனவர்களோ அல்லது இலங்கை மீனவர்களோ திட்டமிட்டு கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என இரண்டு தரப்பினரும் கூறியிருந்தனர்.
இந்த சந்திப்பு நிறைவு பெற்றதன் பின்னர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.


Advertisement