பேருந்திற்குள் துப்பாக்கிச் சூடு

இன்று காலை 8.05 மணி அளவில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடகொஹொடே, போகஹ சந்திக்கு அருகில் பேருந்து ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அலுத்கமவில் இருந்து எல்பிட்டிய வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினுள் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவரால் அதில் பயணித்த மற்றுமொரு பயணி மீது இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

41 வயதுடைய வல்ஹிங்குருகெடிய, ஊரகஸ்மங்கெடிய பகுதியை சேர்ந்த ரஞ்சித் ஜயவர்தன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் வழக்கு ஒன்றிற்காக இன்று காலை சென்றுக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

அவரின் தாய் மற்றும் சகோதரி ஒருவர் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்படும் போது பேருந்தினுள் பயணித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement