தற்போதைய சூழ்நிலை மிகவும் அமைதியாக இருக்கின்றது


(க.கிஷாந்தன்)

இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மிகவும் அமைதியாக இருப்பதாகவும் மிக விரைவில் இலங்கை கல்வித்துறையிலும் விசேடமாக தொழில்நுட்ப கல்வியிலும் பாரிய வளர்ச்சியை காண முடியும் எனவும் அதற்கான ஒத்துழைப்பை தென்கொரிய அரசாங்கம் இலங்கைக்கு எப்பொழுதும் வழங்க தயாராக இருப்பதாகவும் தென் கொரிய நாட்டின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தென்கொரிய நாட்டின் குவான்ஜோ மெட்ரோ பொலிடன் கல்வி திணைக்களத்தின் குழுவினர் நுவரெலியாவிற்கு விஜயம் செய்திருந்தனர். இந்த குழுவினரை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கையின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் தென்கொரிய நாட்டின் குவான்ஜோ மெட்ரோ பொலிடன் கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர் ஒசியூன் ஜயோன். தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தென்கொரிய அரசாங்கம் இலங்கை நாட்டின் பாடசாலை தொழில்நுட்ப கல்வி தொடர்பாக வழங்கி வருகின்ற ஒத்தழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் மலையக பாடசாலைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பாக ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அத்துடன் எங்களுடைய தொழில்நுட்ப கல்வியை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு கொரியாவிற்கு புலமைப்பரிசில் வழங்கி அவர்களுடைன கற்பித்தல் திறனை   அபிவிருத்தி  செய்வதற்கும் ஆவண செய்ய வேண்டும். மலையகத்தில் தொழில்நுட்ப ரீதியான நவீன முறையிலான வகுப்பறை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கலந்துரையாடலின் பொழுது பேசப்பட்டுள்ளது.

இதனை அந்த குழுவினர் ஏற்றுக் கொண்டதுடன் இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் எச்.யு.பிரேமதிலக்க மற்றும் உதவி பணிப்பாளர் பி.டி.டீ.தில்ஹானி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தென் கொரிய அரசாங்கத்தின் மூலமாக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் வருடாந்தம் தொழில்நுட்ப கல்வியை கற்பிக்கும் 25 ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.