தாழமுக்கம் அடுத்த 48 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுவடையும் சாத்தியம்


கிழக்கு- மத்திய மற்றும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிலும் அந்தமான் கடற்பரப்பிலும் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேச நிலை ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வட அகலாங்கு 13.3 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.9 E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து மேற்கு - வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக மேலும் விருத்தியடைந்துமேற்கு - வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல், காற்றின் வேகமானது திடீரென்று அதிகரித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்) இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.