#StreamingWars அமேசான், நெட்ஃப்ளிக்ஸுடன் போட்டிபோடுமா ஆப்பிள் டி.வி ப்ளஸ்?


நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டாரைத் தொடர்ந்து, தற்போது ஆப்பிளும் `காசு கட்டுங்கடே படம் தருகிறோம்' என மாதச் சந்தாவுடன் வீட்டு வாசலில் தேவுடு காக்க ஆரம்பித்திருக்கிறது. மாதம் 99 ரூபாய், ஆண்டுக்கு 999 ரூபாய். ஆப்பிள் டி.வி+ என்னும் பெயரில் ஆப்பிள் லேப்டாப், ஐபேடு, ஐஃபோன் என அனைத்து ஆப்பிள் சாதனங்களிலும் இது வேலை செய்யும். சில ஆண்ட்ராய்டு டி.வி-களிலும் இதற்கான சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மாதம் 4.99 டாலர் என விலை நிர்ணயித்த ஆப்பிள், நம்மூருக்கு ஏற்றவாறு 99 ரூபாய் என இறங்கிவர முடிவு செய்திருக்கிறார்கள். சமீபத்தில் ஆப்பிள் சாதனங்கள் வாங்கியவர்களுக்கு, இந்தச் சேவையை ஒரு வருடம் இலவசமாகவும் தருகிறது ஆப்பிள். எல்லாம் சரி, மாதம் 99 ரூபாய்க்கு இது வொர்த்தா இல்லையா என்பதுதான் தற்போதைய கேள்வி.
Apple TV Plus | ஆப்பிள் டிவி ப்ளஸ்
Apple TV Plus | ஆப்பிள் டிவி ப்ளஸ்
முத்துக்கு முத்தாக என பெரியவர்களுக்கு நான்கு, சிறியவர்களுக்கு மூன்று என நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள். See, Dickinson போன்ற வெப் சீரிஸ்களும் இதில் அடக்கம்.
டிக்கின்சன்
Dickinson
டிக்கின்சன் | Dickinson
டிக்கின்சன் | Dickinson
பெண்ணிய எழுத்தாளர் எமிலி டிக்கின்சனின் வாழ்வில் நடந்த சம்பவங்களைப் புனைவாகக்கொண்டு வெளியாகியிருக்கிறது, `டிக்கின்சன்' என்னும் காமெடி வெப் சீரிஸ். 18-ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த பெண் கவிஞர்களுள் ஒருவரான எமிலி டிக்கின்சனின் மறைவுக்குப் பிறகுதான், அவரின் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளியாகின. எமிலி டிக்கின்சன், அவரது வாழ்நாளில் எப்படியிருந்திருப்பார் என்பதைத் சொல்கிறது இந்த `டிக்கின்சன்' தொடர். செம்ம ஜாலியாகச் செல்லும் இந்தத் தொடர்தான், ஆப்பிள் டி.வி+-ன் முதல் ஹிட்.
தி மார்னிங் ஷோ
The Morning Show
தி மார்னிங் ஷோ | The  Morning Show
தி மார்னிங் ஷோ | The Morning Show
பெரும் செலிப்ரிட்டிகளை வைத்து ஆப்பிள் ஆரம்பித்திருக்கும் மற்றுமொரு வெப்சீரிஸ்தான் இது. `ஹலோ தமிழா', `வணக்கம் தமிழகம்' டைப்பான ஒரு அமெரிக்க ஷோ, TRP-யில் பின்னியெடுக்கிறது. இந்த நிகழ்ச்சி, செட்டுக்குப் பின் நடக்கும் நிகழ்வுகளும் இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சந்திக்கும் சவால்களும்தான், `தி மார்னிங் ஷோ'. அமெரிக்கா கலையுலகை அதிரவைத்த #MeToo பின்னணியில் வரும் முக்கியமான தொடர் என இதைச் சொல்லலாம். இந்தியாவுக்கு இது எந்த அளவில் தொடர்பிருக்கும் என்பதெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். ஆனால், ஜெனிஃபர் அனிஸ்டன், ரீஸ் விதர்ஸ்பூன் என இந்திய வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு பரிச்சயமான செலிப்ரிட்டிகள் இருப்பதால், இதுவும் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துவிடும் என்று நம்பலாம்.
சீ
See
சீ | See
சீ | See
இந்த ஜானரில், கடந்த சில ஆண்டுகளில் 10 படங்கள் வந்துவிட்டன. பார்த்தால் உயிர் போய்விடும் என நெட்ஃப்ளிக்ஸில் வெளியான `தி பேர்ட் பாக்ஸ்', ஏற்கெனவே அதிரிபுதிரி ஹிட். அதற்கு முன்பு, `சத்தம் கேட்டால் கொன்றுவிடும்' என வந்த ஹாலிவுட் படமான Quiet Place, மனோஜ் நைட் ஷியாமளனின் படங்கள் என காஞ்சனா சீரீஸ் அளவுக்கு படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. See-ல் நாயகன் `கேம் ஆஃப் த்ரோன்ஸ் - டோத்ராக்கி' புகழ் ஜேசன் மமூவா என்றதும், ஹைப் இன்னும் அதிகமாகப் பற்றிக்கொண்டது. பார்க்கும் திறன் இல்லாதவர்கள் மட்டுமே இருக்கும் எதிர்காலத்தில், ஜேசன் மமூவாவுக்கு பிறக்கும் இரு குழந்தைகளுக்கும் கண்பார்வை இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது See. பங்களாதேஷை பந்தாடுவார் என எதிர்பார்த்த ரோஹித் ஷர்மா, முதல் போட்டியிலேயே அந்த அணியிடம் மண்ணைக் கவ்வியது போல, இந்தத் தொடரின் ரிசல்ட்டும் அப்படியே உல்ட்டாவாகிவிட்டது.
தி எலிஃபன்ட் குயின்
The Elephant Queen
The Elephant Queen | தி எலிபன்ட் குயின்
The Elephant Queen | தி எலிபன்ட் குயின்
யானைகள் என்றாலே நம் மனதும் யானை அளவுக்குப் பெரிதாகிக் குதூகலமாகிவிடும். ஆப்பிளின் முதல் டாக்குமென்ட்ரி இது. பெரிய தந்தம்கொண்ட Athena என்னும் தாய் ஆப்பிரிக்க யானை ஒன்றின் கதையைச் சொல்கிறது `The Elephant Queen'. ஆனால், புதிதாக அதில் சொல்ல விஷயம் இருக்கின்றதா என்றால் நிச்சயம் இல்லை என்றே தோன்றுகிறது. சாரி ஆப்பிள்.
இதுபோக, For all Mankind என்னும் Sci fi தொடரும், சிறுவர்களுக்காக சில தொடர்களும் வெளியாகியிருக்கின்றன.
சரி, மீண்டும் முதல் பத்திக்கு வருவோம். மாதம் 99 ரூபாய் கட்டுமளவுக்கு ஆப்பிள் டி.வி வொர்த்தா?
ப்ரைம் வீடியோ
ப்ரைம் வீடியோ
இதே மாதம் 129 ரூபாய் பிளானில் இயங்கும் அமேசான் ப்ரைமை எடுத்துக்கொள்வோம். மலையாள வைரல் `ஜல்லிக்கட்டு' முதல் தனுஷின் `அசுரன்' வரை லேட்டஸ்ட் படங்கள், பழைய படங்கள் என அமேசான் கொட்டித்தருகிறது. அதுபோக, அமேசானில் ஆர்டர் செய்யும்போது, ப்ரைம் வாடிக்கையாளர் என்றால் ஒரு நாளில் பொருள் உங்கள் வீட்டுக்கு வந்துவிடும். அதேபோல் ஸ்பாட்டிஃபை தரத்தில் இல்லாவிட்டாலும், பாடல்களை ஜாலியாக கேட்கவும் அமேசான் மியூசிக் சேவையைத் தருகிறது அமேசான் ப்ரைம். இதுபோக, அமேசான் ப்ரைமை வைத்து சில மின்புத்தகங்களைப் படித்துக்கொள்ளலாம். இதனுடன் ஒப்பிட்டால் ஆப்பிள் தருவதென்பது... ம்ஹும். சரி, அமேசானை விட்டுவிடுவோம். ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் என யாருடன் ஒப்பிட்டாலும் ஆப்பிள் தந்திருப்பது என்பது யானைப்பசிக்கு அல்ல, கொசுப்பசிக்குக்கூட பத்தாத ஒன்று.
`இறங்கி அடித்திருக்கும் ஆப்பிள்!' புதிய யுக்தி கைகொடுக்குமா? #AppleEvent
ஆப்பிள் டி.வி-யில் 99 ரூபாய் கட்டி புதிதாக லாகின் செய்யும் ஒரு நபர், அங்கிருக்கும் படங்களின் வரிசையைப் பார்த்தால், 'என்ன... என்ன ஐயிட்டங்களோ' என வடிவேலு ஸ்லாங்கில் பாடலாம் என்றுதான் தோன்றும். காரணம், தற்போது வெளியான `ஆங்கிரி பேர்ட்ஸ் 2' வரை எல்லாப் படங்களும் ஆப்பிள் டி.வி-யில் இருக்கும். ஆனால். ஒவ்வொரு படத்துக்கும் `வாடகைன்னா 150 ரூபாய், சொந்தத்துக்குன்னா 600+ ரூபாய்' எனக் கழுத்தில் கத்தி வைக்கிறது ஆப்பிள். ஏம்பா அப்ப அந்த 99 ரூபாய் என்பது? என்றால், அது ஆப்பிள் டி.வி ப்ளஸ் நிகழ்ச்சிக்கு மட்டும்தான் என்கிறது. இதுமட்டுமல்லாமல், இந்தியாவில் நிகழ்ச்சிகள் அனைத்தும் சென்சார் செய்யப்பட்டே வெளியாகியிருக்கின்றன.
சரி, ஆப்பிளின் தரம் என்பது ஆண்ட்ராய்டுவாசிகளுக்குத் தெரியாது என்னும் பழமொழியை இதற்கும் சொல்லிக்கொள்ளலாம்தான். ஆனால், ஆப்பிளின் UI-யும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் தரத்தில் இல்லை.
இன்னும் சில மாதங்கள் பொறுத்து, என்னென்ன நிகழ்ச்சிகள் வருகிறது என்று பார்த்து, ஆப்பிள் டி.வி-க்கு `சர்ப்பரைஸ்(!)' செய்து கொள்ளுங்கள் என்பதுதான் தற்போதைய அட்வைஸ்.