சம்பிக்க ரணவக்க மீண்டும் விளக்கமறியலில்


முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதவான் நெரஞ்சன் டி சில்வா உத்தரவிட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் படி முன்னாள் அமைச்சர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை இன்று வரையில் விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதன்படி, இன்று முற்பகல் சிறைச்சாலை அதிகாரிகளால் பாட்டளி சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

பாட்டளி சம்பிக்க ரணவக்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் அவருக்கு பிணை வழக்குமாறு நீதிமன்றில் கோரியிருந்தனர்.

இதன்போது, பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு பின்னர் வழங்கப்படும் என நீதவான் தெரிவித்துள்ளார்.

மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாலும் மற்றும் பல சட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாலும் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுவதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

கவனயீனத்துடன் வாகனத்தை செலுத்தி நபரொருவரை படுகாயமடையச் செய்தமை மற்றும் வீதி விபத்தின் போது வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை ஆரம்பித்துள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.