ரஞ்சன் ராமநாயக்கவினால் சுமார் 15,000 குரல் பதிவுகள் அடங்கிய 5 இறுவெட்டுகள்


பாராளுமன்றம் இன்று (23) காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான ஒழுங்குவிதிகள் குறித்து இன்று விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

இன்றைய அமர்வின்போது, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறப்புரிமை கேள்வியை எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சிறப்புரிமை கேள்வியை எழுப்புவதற்கு அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்த போதிலும் அது மறுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் சுமார் 15,000 குரல் பதிவுகள் அடங்கிய 5 இறுவெட்டுகள் நேற்று மாலை, பாராளுமன்ற செயலாளர் நாயக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சபாநாயகரிடம் அவை ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அவற்றை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்  பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய தடயவியல் கணக்கறிக்கை, இறுவெட்டுக்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவற்றை இன்று அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று கூடவிருந்த அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.


Advertisement