வைஃபை காலிங் என்றால்


2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என்று அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான அதிவேக இணைய சேவைகள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், இதனால் எனக்கு என்ன பலன்? இன்னும் சாதாரண குரல்வழி அழைப்பைக் கூட தெளிவாக, தடையின்றி மேற்கொள்ளமுடியவில்லையே… என்று மோசமான அலைவரிசை பிரச்சனையால் குமுறுபவர்கள் ஏராளம்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் குரல்வழி அழைப்பின் அடுத்த கட்டம் என்று கூறி அறிமுகப்படுத்தியுள்ள வைஃபை காலிங் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? போன்ற கேள்விகளுக்கான பதில்களை அலசுகிறது இந்த கட்டுரை.

வைஃபை காலிங் என்றால் என்ன?

முற்றிலும் வீடுகளால் சூழப்பட்ட நகர்ப்புற பகுதிகளில் ஏகப்பட்ட அலைவரிசை கோபுரங்கள் இருந்தாலும், குரல்வழி அழைப்புகளை மேற்கொள்வதிலும், தங்குதடையின்றி உரையாடுவதிலும் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதே பிரச்சனை கிராமப்புற பகுதிகளில் வேறொரு வடிவில் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில், இந்த பிரச்சனையை போக்குவதற்கு இந்தியாவிலுள்ள சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள புதிய முயற்சிதான் வைஃபை காலிங்.
வைஃபை காலிங் - பெயர் குறிப்பிடுவதை போன்றே இந்த முறையில் உங்களது வைஃபை இணைப்பைப் பயன்படுத்தி திறன்பேசிகளுக்கு இடையிலான குரல்வழி அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத்தான் ஏற்கனவே, வாட்சாப் உள்ளிட்ட செயல்களின் வாயிலாக இணையத்தைப் பயன்படுத்தி மேற்கொண்டு வருகிறோமே என்கிறீர்களா? ஆனால், இந்த புதிய வைஃபை காலிங்கை மேற்கொள்வதற்கு தனியே எந்தவொரு செயலியும் தேவையில்லை என்பதுதான் இதன் சிறப்பம்சமே.

WiFi Calling என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதற்கு முன்பாக, 4ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இரு திறன்பேசி பயன்பாட்டாளர்களிடையே மேற்கொள்ளப்படும் குரல்வழி அழைப்புகளின் தரத்தை அதிகரிக்க VoLTE எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதன் நீட்சியே இந்த வைஃபை காலிங் (VoWiFi).

இதை பயன்படுத்துவது எப்படி?

இந்தியா முழுவதுமுள்ள தங்களது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பைடு வாடிக்கையாளர்கள் வைஃபை காலிங் வசதியை இலவசமாக பயன்படுத்த முடியும் என்று ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஆனால், வைஃபை காலிங்கை பயன்படுத்துவதற்கு முன்னர் கீழ்க்காணும் நான்கு விடயங்களை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
1. அனைத்து வகை திறன்பேசிகளிலும் வைஃபை காலிங்கை மேற்கொள்ள முடியாது. எனவே, உங்களது திறன்பேசியில் இந்த வசதியை பயன்படுத்த முடியுமா என்பதை உங்களது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக உறுதிசெய்து கொள்ளுங்கள்.

WiFi Calling என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2. உங்களது திறன்பேசியில் வைஃபை காலிங்கை மேற்கொள்ள முடியும் என்றால், அதற்கேற்றபடி செட்டிங்சை மாற்றியமையுங்கள். அதாவது, உங்கள் திறன்பேசியில் VoLTE மற்றும் VoWiFi தொழில்நுட்பங்களை கொண்டு அழைப்பை மேற்கொள்ளுவதற்கு செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று ஒப்புதல் தெரிவியுங்கள்.
3. ஒருவேளை வைஃபை பயன்படுத்த கூடிய பட்டியலில் உங்களது திறன்பேசி மாடல் இருந்தும், மேற்காணும் செட்டிங்சை மேற்கொள்ள முடியவில்லை என்றால், உங்களது திறன்பேசியின் இயங்குதளத்தை புதுப்பிக்கவும்.
4. கடைசியாக, நிலையான வைஃபை இணைப்பை பயன்படுத்தி இதே முறையை கையாளும் மற்றொரு நபருக்கு நீங்கள் தெளிவான, தங்குதடையற்ற குரல்வழி அழைப்பை மேற்கொள்ள முடியும்.

வைஃபை காலிங்கின் பலன்கள் என்னென்ன?


WiFi Calling என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தெளிவான, தடையற்ற குரல்வழி அழைப்புகள் மட்டுமின்றி வைஃபை காலிங் வசதியை பயன்படுத்துவதால் வேறு பல பலன்களும் இருப்பதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
1. வீடு, அலுவலகம் என இந்தியா முழுவதுள்ள எந்த வைஃபை இணைப்பை பயன்படுத்தியும் இந்த வசதியை பெற முடியும். இதற்கு ரோமிங் உள்ளிட்ட எந்த கூடுதல் கட்டணமும் இல்லை.
2. VoLTE மற்றும் VoWiFi ஆகியவற்றை ஒருசேர பயன்படுத்துவதன் மூலம் மிகவும் துல்லியமான, தெளிவான (எச்டி) குரல்வழி அழைப்பை மேற்கொள்ள முடியும்.
3. எவ்வித செயலியும் தேவைப்படாத இந்த சேவையில், சாதாரண அழைப்பை விட வேகமாக உங்களது அழைப்புகள் மற்றொருவரை சென்றடையும்.
4. செயலி அடிப்படையிலான குரல்வழி அழைப்புகளை விட, இந்த வகை அழைப்புகளில் ஒப்பீட்டளவில் குறைவான மின்சக்தியே செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.
5. திறன்பேசியின் இணையத்தை பயன்படுத்த குறிப்பிட்ட வரம்புகள் உள்ள நிலையில், வைஃபை இணைப்பை பயன்படுத்துவதன் மூலம் அந்த பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
6. பொதுவாக சரிவர அலைவரிசை கிடைக்காத இடங்களிலும், இந்த முறையில் வைஃபை இணைப்பை கொண்டே சாதாரண குரல்வழி அழைப்பை மேற்கொள்ள முடியும்.
பிற செய்திகள்: