ஹலிதா ஷமீம்,சில்லுக் கருப்பட்டி இயக்குநருடன் நேர்காணல்


நான்கு வெவ்வேறு கதைகள். அவை எல்லாவற்றிற்கும் அன்பு ஒன்றே அடிநாதம். எதார்த்தமான படைப்பின் மூலம் அனைவரையும் ரசிக்க வைக்கும் திரைப்படம் தான் 'சில்லுக் கருப்பட்டி'. இந்தப் படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம் உடனான கலந்துரையாடலிலிருந்து..
கேள்வி: முதல் படத்திற்கும், இரண்டாவது படத்திற்கும் இடையில் சற்று இடைவெளி விட்டதற்கான காரணம் என்ன ?
பதில்: இடைவெளி இல்லாமல் இயங்கிக் கொண்டே இருந்திருக்கிறேன். பூவரசம் பீப்பீக்கு அடுத்து மின்மினி என்கிற படத்துடைய முதல் பாதியை எடுத்து விட்டேன். சில்லுக் கருப்பட்டி படம் எடுப்பதற்கு எனக்கு இரண்டு வருடங்கள் ஆனது. இந்தப் படத்தை வெளியே கொண்டு வருகிற இடைவேளையில் 'ஏலே'ன்னு இன்னொரு படத்துடைய ஷுட்டிங்கையும் முடித்துவிட்டேன். நான் இயங்கிக் கொண்டே இருந்திருக்கேன் என்பது அடுத்தடுத்து படங்கள் வெளிவரும்போது தெரியும்.
கே: பெண்கள் அவர்களுக்குப் பிடித்த துறையைத் தேர்வு செய்துவிடக் கூடிய சூழல் இருக்கிறதா? தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் மிகக் குறைவு. இந்தத் துறைக்குள் வருவதற்கு நீங்கள் எவ்வளவு சவால்களைக் கடக்க வேண்டியிருந்தது ?
ப: அது மிகவும் கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். இப்பொழுது அந்த சூழல் மாறிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் சுதந்திரமாக முடிவெடுக்க முடிகிறது. என்னுடைய குடும்பத்தில் அனைவருமே உறுதுணையாக இருந்தார்கள். சிறு வயது முதலே இயக்குநராகப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்ததால் அப்பொழுதே என் விருப்பப்படி தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தைக் கொடுத்து விட்டார்கள். உதவி இயக்குநராக நான் முயற்சி செய்கின்ற சமயத்தில் சில கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆரம்பக்கட்டத்தில் ஒரு பெண் உதவி இயக்குநரை டீமில் சேர்த்துக் கொள்வதற்கு ஒரு சிலர் யோசித்திருக்கிறார்கள். அதனைத் தவிர்த்து நான் வேலை பார்த்த படங்களில் நான் ஒரு பெண் என்பதனால் எந்தவிதப் பிரச்னையும் வந்ததில்லை.
திரைத்துறையில் பெண்கள் நுழைவதை தடுப்பது எது? - சில்லுக் கருப்பட்டி திரைப்படத்தின் இயக்குநர் பேட்டிபடத்தின் காப்புரிமைTWITTER
கே: சில்லுக்கருப்பட்டி மூலமா தித்திப்பான காதலை சொல்லியிருக்கிறீர்கள். எப்படி உங்களுக்குள் இத்தனை அழகான அனுபவங்கள்? காதல், அன்பு, துணை பற்றிய உங்களுடைய பார்வை என்ன ?
ப: நம்மைச் சுற்றிலும் பல காதல்களைப் பார்க்கிறோம். அதுமட்டுமில்லாமல் இப்படியெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற என்னுடைய ஆசையும் இந்தப் படத்தில் இருக்கிறது. இந்த நான்கு கதைகளையும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கவில்லை. நான்கு கதைகளுமே ஒரு கற்பனை தான். இப்படியெல்லாம் இருந்தால் நன்றாக இருக்குமே என்கிற எண்ணம். காதல், அன்பு, துணை ஆகியவற்றுள் முதலில் அன்பு. எது இருந்தாலும், இல்லை என்றாலும் பொதுவாக அன்பின் மூலமாகவே அனைத்தும் இயங்குகிறது. காதல் கிடைத்தால் பாக்கியம். சரியான துணை அமைவது வரம். காதலும், துணையும் இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அன்பு பிரதானம்.
கே: பிங்க் பேக், காக்கா கடி, டர்ட்டிள்ஸ் வாக், ஹே அம்மு.. இந்த நான்கு அத்தியாயங்களின் தலைப்புகளுக்குப் பின்னால் இருக்கின்ற ரகசியம் ?
ப : இந்தத் தலைப்புகள் நான்குமே காரணமாகத் தான் வைத்திருக்கிறேன். பிங்க் பேக் பொறுத்தவரை, காகிதப்பை அந்தச் சிறுவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதற்காகவே. ஒவ்வொரு முறையும் பிங்க் நிறப் பையை தேடி எடுக்கிறான் என்பதனால் அது பிங்க் பேக்.இரண்டு பேரும் பயணத்தை ஷேர் செய்கிறார்கள் என்பதனால் காக்கா கடினம்
அதுமட்டுமில்லாமல் இந்தக் கதையில் காக்கா முக்கியமான கதாபாத்திரம் என்பதாலும் இந்தப் பெயர். டர்ட்டிள்ஸ் வாக் எடுத்துக் கொண்டால் அவர்கள் மெதுவாக முதுமையில் அவர்களுடைய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள் அதற்காக ஆமையுடன் ஒப்பிட்டு அந்தக் கதைக்களம் அமைத்தேன். அடுத்தததாக ஹே அம்மு, ஹே அலெக்‌சா, ஹே கூகுள் போன்று செயற்கை நுண்ணறிவுடையது என்பதனால் இந்தப் பெயர்.
கே: கமர்ஷியலா இந்தப் படம் ஹிட் ஆகுமான்னு யோசிச்சீங்களா?
ப: இந்தப் படத்திற்கு செலவிட்டத் தொகை மிகக் குறைவு. இதை ஒரு சோதனையாகத் தான் பண்ண நினைத்தேன். சிறிய பட்ஜெட்டில் பண்ணியதால் அந்த பயம் இல்லை. ஆனால், படம் திரைக்கு வரும்போது ஒருவித பயம் இருந்தது. பெரிய பேனரில் படம் வெளியாகும்போது அந்த பேனர்களுக்கான ஃபேமிலி ஆடியன்ஸ் இந்தப் படத்திற்கு வருவார்களா என சந்தேகம் இருந்தது. ஆனால், அவை அனைத்துமே படம் வெளியாவதற்கு முந்தைய இரவு வரையில் மட்டுமே. பெரிய அளவில் மக்கள் இந்தப் படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது.
திரைத்துறையில் பெண்கள் நுழைவதை தடுப்பது எது? - சில்லுக் கருப்பட்டி திரைப்படத்தின் இயக்குநர் பேட்டிபடத்தின் காப்புரிமைTWITTER
கே: ஒரு படத்துடைய வெற்றி, தோல்வி என்ன மாதிரியான விஷயங்களை இயக்குநர்களிடம் ஏற்படுத்தும்? அதுவும் குறிப்பாக பெண் இயக்குநர்களுக்கு...
ப: வழி என்பது பொதுவான ஒன்று. அதனால் பெண் இயக்குநர் எனத் தனியாக பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. பூவரசம் பிப்பீ வெளியான சமயத்தில் அது கமர்ஷியலாக ஹிட்டாகாமல் இருந்திருக்கலாம். ஏனெனில், அது எடுக்கப்பட்ட உடனே திரையிடப்பட்டிருக்கலாம். அது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் தானே தவிர நாம் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறோம். அந்தப் படத்திற்கு கிடைக்காத அங்கீகாரம் இந்தப் படத்தின் மூலம் எனக்கு கிடைத்திருக்கிறது எனில் இது எனக்கு ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அது மகிழ்ச்சியளிக்கிறது. தோல்வி எந்த வகையில் பாதிக்கும் எனில், அடுத்தகட்டம் நகர்வதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும்.
கே: காதலில் தோல்வி அடைந்த ஆண்கள் திருமணம் செய்யாமல் காதலியையே நினைத்துக் கொண்டிருப்பதாகப் பார்த்துப் பழகிய தமிழ் சினிமாவில் காதலனுக்காக காதலி 60 வருடங்கள் காத்திருப்பதாக காட்டியிருந்தீர்கள். இப்படி தமிழ் சினிமாவில் இன்னும் எவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என நினைக்குறீர்கள் ?
ப: சினிமா பார்க்கும்போது நிறைய விஷயங்கள் எனக்கு பிடிக்காமல் இருக்கலாம். நிறைய விஷயங்கள் மாற வேண்டும். பெண்களை பைத்தியம் போன்று காட்சிப்படுத்தக் கூடாது, பெண்களைத் திட்டினால் கைத்தட்டல் விழும் என காட்சிகள் அமைக்கக் கூடாது, பாடல்களை எல்லாம் கவனமாக எழுத வேண்டும். சாலையில் நடந்து செல்கிற பெண்களை கிண்டல் செய்வதற்கு ஏதுவாக இருப்பது போன்ற பாடல்கள் இருக்கக்கூடாது. பெண்களை செயற்கைத் தனமாக காட்டக் கூடாது.