திடீர் பரிசோதனை


(கிஷாந்தன்)

மஸ்கெலியா - நல்லத்தண்ணி நகரிலுள்ள 23 சுற்றுலா விடுதிகள் சுகாதார அதிகாரிகளால் திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போது உணவு பயன்பாட்டு சட்டத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 7 விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைபாடுகளை நிவர்த்தி செய்து, உரிய நடைமுறைகளை பின்பற்றி விடுதிகளை நடத்துவதற்கு அவர்களுக்கு ஒருவாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் காமினி பெரேரா தெரிவித்தார்.

சிவனொளி பாதமலைக்கு யாத்திரை வரும் பக்த அடியார்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுத்தமான – சுகாதாரமான உணவு மற்றும் பாணங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, நல்லத்தண்ணி நகரம் மற்றும் நல்லத்தண்ணி – சிவனொளிபாதமலை வீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதிகள், உணவகங்கள், இனிப்பு பண்டங்களை தயாரிக்கும் நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றுக்கு இது தொடர்பில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சிவனொளிபாதமலை பருவகாலத்தையொட்டி இரண்டு பொது சுகாதார அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இக்குழுவிலுள்ள அதிகாரிகளால் அனைத்து நிலையங்களும் பரிசோதனைக்குட்படுத்தப்படும். சட்டவிதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.