#BBC
தென் கொரியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கோவிட் - 19) காரணமாக அங்குள்ள பெருமளவிலான இலங்கையர்கள் அச்ச நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை பணியாளர்களில் பெருமளவிலான பணியாளர்கள் தென் கொரியாவிலேயே உள்ளனர்.
சுமார் இருபது ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் அங்கு வாழ்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
தென் கொரியாவின் டேகு நகரில் அதிகரித்துவரும் கோவிட் - 19 வைரஸ் தாக்கம் காரணமாக, அங்கு வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் சோல் நகரிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
சோல் நகரிலுள்ள இலங்கை தூதரகத்தின் தகவல்களின் பிரகாரம், தென் கொரியாவிலுள்ள எந்தவொரு இலங்கையர்களும் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லை என அமைச்சு தெரிவிக்கின்றது.
GETTY IMAGES
தென்கொரியாவில் இருபது ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்களில், டேகு நகரில் மாத்திரம் 915 இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சோல் நகரிலுள்ள இலங்கை தூதரகத்தின் தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொலைபேசி இலக்கங்கள்:
தூதரகத்தின் பொதுவான தொலைபேசி இலக்கங்கள்:
(0082)-2-735-2966, (0082)-2-735-2967, (0082)-2-794-2968
செல்வி. சசங்கா நிகபிட்டிய, முதலாம் செயலாளர் - (0082)-10-7222-1352
திரு. செனரத் யாப்பா, ஆலோசகர் (வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி) - (0082)-10-3389-2227
செல்வி. நிலந்தி பெலவத்தகே, இரண்டாம் செயலாளர் - (0082)-10-4084-0855
செல்வி. சமந்தா சேநாயக்க, மூன்றாம் செயலாளர் (வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி) - (0082)-10-7499-2966
இதுதொடர்பாக, தென் கொரியாவின் பூசன் நகரில் பணிபுரியும் இலங்கையை சேர்ந்த விஜேஸ்கண்ணாவிடம் பிபிசி தமிழ் பேசியது.

தென்கொரியாவில் பரவிவரும் கோவிட் - 19 வைரஸ் காரணமாக தாம் அச்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வைரஸ் பரவல் தொடர்பில் தமக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டமொன்றிற்கு இலங்கை அதிகாரிகள் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்த கலந்துரையாடலின் பின்னரே எதிர்வரும் காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், தென் கொரியாவில் வாழும் தாம் பாரிய அச்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக விஜேஸ்கண்ணா கூறுகிறார்.
டயமண்ட் ப்ரின்சஸ் கப்பலிலுள்ள இலங்கையர்களின் நிலைமை
ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் ப்ரின்சஸ் கப்பலிலுள்ள இரண்டு இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
கப்பல் நிறுவனத்துடன் டோக்கியோவிலுள்ள இலங்கை தூதரகம் நெருக்கமாக ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
GETTY IMAGES
குறித்த இரண்டு இலங்கையர்களும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் உள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சு கூறுகின்றது.
டயமண்ட் ப்ரின்சஸ் கப்பலிலுள்ள 454 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.


Post a Comment
Post a Comment